சுற்றுலாப் பயணிகளை கவர்ந்த ஸ்பார்தோடியா மரப்பூக்கள்
மூணாறு : மூணாறில் கொசுக்களை அழிக்கும் தன்மை கொண்ட 'ஸ்பார்தோடியா' மரங்களில், பூத்துள்ள சிவப்பு நிறப் பூக்களை சுற்றுலாப் பயணிகள் அதிசயத்துடன் பார்த்துச் செல்கின்றனர். 'நம்முடைய துாக்கத்தைக் கெடுத்து, பல்வேறு தொற்று நோய்களை பரவ செய்யும் கொசுக்களை இயற்கை முறையில் அழிக்கலாம்.', என்பது தற்போதுள்ள தலைமுறையினருக்கு தெரியாது. அந்த தன்மை 'ஸ்பார்தோடியா' மரங்களுக்கு உண்டு. அந்த மரத்தில் பறவை வடிவில் சிவப்பு நிறத்தில் பூக்கும் பூக்கள் கொசுக்களை எளிதில் ஈர்க்கும். அவ்வாறு ஈர்க்கப்படும் கொசுக்கள் பூக்களில் சுரக்கும் ஒரு வித பசை போன்ற திரவத்தில் சிக்கி அழிந்து விடும். மூணாறை சுற்றியுள்ள தேயிலை எஸ்டேட்டுகளை ஆரம்ப காலங்களில் ஆங்கிலேயர்கள் நிர்வகித்து வந்தனர். அப்போது மலேரியா காய்ச்சல் மூலம் தொழிலாளர்கள் ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர். அந்நோய் பரவலுக்கு காரணமான கொசுக்களை அழிக்க இங்கிலாந்து உள்பட வெளிநாடுகளில் இருந்து 'ஸ்பார்தோடியா' மரக்கன்றுகளை கொண்டு வந்து நடவு செய்து பராமரித்து வளர்த்தனர். அவை மரங்களாக வளர்ந்த பிறகு பூக்கள், கொசுக்களை அழிக்க முக்கிய பங்கு வகித்தன. அவற்றை 'மலேரியா' மரங்கள் எனவும் அழைக்கப்படுகின்றன. அந்த மரங்கள் பல பகுதிகளில் அழிந்து விட்டபோதும் சில பகுதிகளில் உள்ள மரங்களில் பூக்கள் பூத்துள்ளன. அவற்றை சுற்றுலாப் பயணிகள் அதிசயத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.