உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / திருவிழாவில் கல்வீச்சு: போலீஸ்காரர் காயம் மூன்று புகாரில் 33 பேர் மீது வழக்கு

திருவிழாவில் கல்வீச்சு: போலீஸ்காரர் காயம் மூன்று புகாரில் 33 பேர் மீது வழக்கு

பெரியகுளம் : பெரியகுளம் அருகே தாமரைக்குளம் செல்லாண்டியம்மன் கோயில் திருவிழா ஊர்வலத்தில் நடந்த கல் வீச்சில் போலீஸ்காரர் யுவராஜா 25, தலையில் காயம் ஏற்பட்டது. மூன்று எஸ்.ஐ., க்கள் தனித்தனி புகாரில் 33 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இக் கோயில் திருவிழாவில் நேற்று முன்தினம் இரவு பெரியகுளத்தில் இருந்து அம்மன்சிலை ஊர்வலமாக கோயிலுக்கு கொண்டு வரப்பட்டது. தென்கரை எஸ்.ஐ., செந்தில்குமார், சிறப்பு எஸ்.ஐ., திருப்பதிராஜா, தமிழ்நாடு சிறப்பு காவல்படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். ஊர்வலத்திற்கு முன் இளைஞர்கள் ஆடிக்கொண்டே சென்றனர். தாமரைக்குளம் அம்பேத்கர் பிரிவு அருகே செல்லும் போது, அப் பகுதியில் சிலர் கற்களை வீசினர். இதில் சிறப்பு காவல்படை போலீஸ்காரர் யுவராஜா காயமடைந்தார். அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எஸ்.ஐ., செந்தில்குமார் புகாரில், கல் எறிந்ததாக பாண்டி, சிவா, ராம், முருகன், ராஜ்குமார், ஆனந்த், பழனிமுத்து உட்பட 13 பேர் மீதும். தென்கரை எஸ்.ஐ., இதிரீஸ்கான் புகாரில், ஒலிபெருக்கியில் அதிக சத்தத்துடன் ஒலிபரப்பு செய்து, பொதுமக்களுக்கு இடையூறு செய்த அம்பேத்கர் தெரு ஆனந்த், காளியம்மன் கோயில் தெரு மதன் மற்றும் 10 பேர் மீதும். தென்கரை எஸ்.ஐ., கர்ணன் புகாரில், திருவிழா பகுதிகளில் சட்டவிரோதமாக ஒன்று கூடி சமுதாயத பாடல்களை சத்தமாக ஒலிக்கச்செய்த தாமரைக்குளம் கிராம கமிட்டி தலைவர் ஞானசுந்தரம் உட்பட பல்வேறு சமுதாயத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் 10 பேர் மீது என 3 வழக்குகளில் 33 பேர் தென்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ