உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / டாக்டர் பரிந்துரையின்றி மருந்து சாப்பிடுவது உடல் நலத்திற்கு கேடு மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குனர் எச்சரிக்கை

டாக்டர் பரிந்துரையின்றி மருந்து சாப்பிடுவது உடல் நலத்திற்கு கேடு மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குனர் எச்சரிக்கை

''டா க்டர்கள் பரிந்துரையின்றி காய்ச்சல் பாதிப்பிற்கு மருந்து, மாத்திரை வாங்கி சாப்பிட்டால் உடல் நலம் பாதிக்கப்படும்.'' என, மாவட்ட நலப்பணிகள் இணைஇயக்குனர் டாக்டர் கலைச்செல்வி எச்சரித்துள்ளார். தேனி மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குனர் கட்டுப்பாட்டில் பெரியகுளம், போடி,கம்பம், உத்தமபாளையம், சின்னமனுார், ஆண்டிபட்டி அரசு மருத்துவமனைகள் செயல்படுகின்றன. பருவமழை காலங்களில் சீதோஷ்ண நிலை மாற்றத்தால் பொது மக்களுக்கு சளி, தொடர் இருமல், காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இப்பாதிப்பில் இருந்து தற்காத்துக் கொள்ளும் ஆலோசனைகளை தினமலர் நாளிதழின் அன்புடன் அதிகாரி பகுதிக்காக இணை இயக்குனர் பேசியதாவது: காய்ச்சல் வராமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ன மழை காலங்களில் திறந்த வெளி, தெருக்கள் வீடுகளுக்கு அருகில் உள்ள பள்ளங்கள், டயர்கள், தேங்காய் சிரட்டைகளில் மழைநீர் தேங்கி கொசுகள் உற்பத்திஆகின்றன. இதனை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். வீடுகளில் பிரிட்ஜ்களில் கழிவுநீர் அகற்றாமல் இருப்பதும் தவறு. இதனை கண்டு கொள்ளாமல் இருந்தால் கொசு உற்பத்திக்கு காரணமாகும். ஒரு கொசு தனது வாழ்நாளில் 3 முறை முட்டையிடும் போதுஒரு கொசுவானது 1200 கொசுக்களை உற்பத்தி செய்கிறது. கொசு உற்பத்தியை தனிமனிதர், குடும்ப அமைப்புகள், உள்ளாட்சி அமைப்புகள் முறையாக கண்காணித்து தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும். கொசு ஒழிப்பில் கவனம் செலுத்தாததால் கொசு கடித்து காய்ச்சல் பாதிப்பு ஏற்படுகிறது. மாவட்டத்தில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிக்க வில்லை. சீதோஷ்ண நிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகள் உள்ளன. தினசரி அரசு மருத்துவமனைகளில் நேரடியாக ஆய்வு செய்து காய்ச்சல் விபரங்களை அறிந்து,சிகிச்சை அளிக்கப்படுகிறது. அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் காய்ச்சல் வார்டுகள் துவக்கப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகின்றன. மழைக்காலங்களில் குடிநீரை எவ்வாறு குடிப்பது கட்டாயமாக குடிநீரை காய்ச்சி ஆற வைத்து குடிக்க வேண்டும். வெள்ளத்தால் சில இடங்களில் குடிநீர் பகிர்மான குழாய்கள் சேதமடைந்து உள்ளன. இதில் குடிநீரில் கிருமிகள் வர வாய்ப்பு அதிகம் இருக்கும். அதனால் குடிநீரை காய்ச்சி குடித்தால் நோய் எதிர்ப்பு சக்தி உடலில் குறைந்திருந்தாலும் பாதிப்பு ஏற்படாது. உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு குடிநீரை குளோரினேஷன் செய்து வழங்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. குடிநீரை காய்ச்சி குடிப்பது அவசியம். மழைகாலங்களில் வெப்பநிலை குறைந்து தொற்றுநோய் தலைதுாக்க ஆரம்பிக்கும் என்பதால் கர்ப்பிணிகள், புரத சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும். குடிநீரை காய்ச்சி வடிகட்டி குடிப்பது அவசியம். பள்ளி செல்லும் குழந்தைகள் பாஸ்ட்புட், முழுமையாக வேகாத உணவு பொருட்களை மழைகாலங்களில் சாப் பிடக்கூடாது. முதியவர்கள் எளிதில் ஜீரணமாகும் உணவுகளைஉட்கொள்ள வேண்டும். தேவையின்றி வெளியிடங்களுக்கு செல்லாமல் மழைநீர் தொற்று ஏற்படாமல் பார்த்து கொள்ள வேண்டும். குறிப்பாக சர்க்கரை, ரத்தஅழுத்த நோய்களுக்கு மாத்திரை எடுத்துக் கொள்பவர்கள் உடல்நிலை மாற்றம் ஏற்பட்டால் உடனடியாக டாக்டர்களை சந்திப்பது அவசியம். பாம்புக்கடி சிகிச்சை குறித்து பாம்புக்கடியால் பாதிக்கப்பட்டு வருபவர்களை உடனடியாக காப்பாற்றுவதற்கான விஷ முறிவு ஊசி மருந்து அனைத்து மருத்துவமனைகளிலும் தேவைக்கு கூடுதலாகவே இருப்பில் வைக்கப்பட்டுள்ளது. அதனால் குறிப்பாக பாம்புக் கடியால் பாதிக்கப்பட்டவர்கள் நேரம் தாழ்த்தாமல் அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு அழைத்து சென்றால் காப்பாற்றி விடலாம். சிறு, சிறு உபாதைகளுக்கு கடைகளில் மாத்திரை வாங்கி பயன்படுத்துகின்றனரே காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்கள் டாக்டர்கள் பரிந்துரை ரசீதுஇன்றி மருந்து கடைகளில் மருந்து மாத்திரைகள் வாங்கி சாப்பிடுவது சமீப நாட்களில் அதிகரித்து, அதனால் அரசு மருத்துவமனைகளுக்கு ஜீரண உறுப்புகள் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு வருவது தொடர்கிறது. அதனால் டாக்டர்கள் பரிந்துரை இன்றி மருந்துகள் வழங்கும் மருந்து கடைகள் மீது சட்டபடி நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பொது மக்களும் டாக்டர் ஆலோசனை பெற்ற பின்பே மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ