மலைவாழ் மாணவர்கள் கல்வி பாதிப்பு: ஆசிரியர்கள் கவலை
மூணாறு: இடமலைகுடி ஊராட்சியில் மழையால் மலைவாழ் மக்கள் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளதால் ஆசிரியர்கள் கவலை அடைந்தனர். மூணாறு அருகே இடமலைகுடியில் அடர்ந்த வனத்தினுள் 24 குடிசைகளில் (கிராமம்) மலைவாழ் மக்கள் வசிக்கின்றனர். அந்த மக்களுக்கு மட்டும் இடமலைகுடி ஊராட்சி உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. அங்குள்ள சொசைட்டி குடியில் அரசு நடுநிலை பள்ளி உள்ளது. அங்கு மீன்கொத்தி, நெல் மணல், மிளகுதரா, கீழ்பத்தம், தூறடி, பரப்பியாறு ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 65 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் பலத்த மழை, யானை உட்பட வனவிலங்குகள் நடமாட்டம், ஆறுகளில் நீர்வரத்து அதிகரிப்பு ஆகியவற்றால் கடந்த சில நாட்களாக மாணவ, மாணவிகள் பள்ளிக்கு வர இயலவில்லை. அதனால் அவர்களின் கல்வி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தவிர காலாண்டு தேர்வு நெருங்குவதால், மாணவர்களால் தேர்வை சரிவர எழுத இயலாது என்பதால் ஆசிரியர்கள் கவலை அடைந்துள்ளனர். அதேபோல் நடப்பு கல்வியாண்டில் முதலாம் வகுப்பில் 13 மாணவ, மாணவிகள் சேர்ந்தனர். அதில் 3 பேர் மட்டும் பள்ளிக்கு வருகின்றனர். மீதமுள்ள வகுப்புகளில் மாணவர் வருகை 50 சதவீதத்திற்கு குறைவாக உள்ளது என்பது குறிப்பிடதக்கது.