கந்த சஷ்டி விழா காப்பு கட்டுதலுடன் துவக்கம் விரதம் கடைபிடித்து கூட்டு வழிபாடுகளில் பங்கேற்பு
கூடலுார்: மாவட்டத்தில் உள்ள முருகன் கோயில்களில் கந்த சஷ்டி விழா காப்பு கட்டுதலுடன் துவங்கியது. ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டி விரதத்தை துவக்கினர். கூடலுார் கூடல் சுந்தரவேலவர் கோயிலில் 28வது ஆண்டு கந்த சஷ்டி விழா துவங்கியது. அனைத்து திரவியங்களுடன் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் தீபாராதனை நடந்தது. மகளிர் குழுவினரின் தெய்வீக கூட்டு வழிபாடு பிரார்த்தனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் காப்புக் கட்டி விரதத்தை துவக்கினர். பக்தர்களுக்கு பழச்சாறு பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து ஐந்து நாட்கள் மகளிர் குழுவினரின் தெய்வீக கூட்டு வழிபாடு நிகழ்ச்சியும், 6வது நாள் காலை பால்குடம் எடுத்தலும், சூரசம்ஹாரம் நிகழ்ச்சியும் நடைபெறும். 7வது நாள் சுந்தரவேலருக்கு திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடக்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை ஒக்கலிகர் காப்பு மகாஜன சங்க நிர்வாகிகள் செய்துள்ளனர். கம்பம்: சுருளி வேலப்பர் என்ற சுப்ரமணியர் கோயிலில் நேற்று அதிகாலை கொடியேற்றம் நடைபெற்றது. தொடர்ந்து காப்பு கட்டுதல் நிகழ்ச்சி துவங்கியது. நூற்றுக்கணக்கில் பக்தர்கள் வரிசையாக நின்று காப்பு கட்டி சஷ்டி விரதத்தை துவக்கினார்கள். முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. அக்.26ல் கோயிலில் குத்து விளக்கு பூஜையும், அக்.27ல் பால் குடம் எடுத்து வந்து, சுருளி வேலப்பருக்கு பாலாபிஷேகமும் நடைபெறும். அன்று மாலை சூரசம்ஹார நிகழ்ச்சியும், அக். 28 ல் திருக்கல்யாணமும் நடைபெறுகிறது. உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் கோயிலில் முருகப் பெருமானுக்கு நேற்று காலை சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. திரளாக பக்தர்கள் குறிப்பாக பெண்கள் காப்பு கட்டி விரதத்தை துவக்கினார்கள். ஆண்டிபட்டி: டி.சுப்புலாபுரம் ஸ்ரீகந்தநாதன் கோயிலில் 170 ம் ஆண்டு கந்த சஷ்டி விழா நிகழ்ச்சி துவங்கியது. விழாவை முன்னிட்டு ஸ்ரீ விநாயகர், கந்தநாதன், தண்டாயுதபாணி கோயில்களில் கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் நடந்தது. கோயில் வளாகத்தில் பக்தர்கள் காப்புக் கட்டி விரதத்தை துவக்கினர். விழாவை முன்னிட்டு தினமும் சுவாமிக்கு அபிஷேகங்கள், அலங்காரத்திற்கான ஏற்பாடுகள் செய்துள்ளனர். அக்., 27ல் சூரசம்ஹாரம் நிகழ்ச்சியும் அதனைத் தொடர்ந்து, சிறப்பு பூஜையும், பருப்பு நீர் வழங்கும் நிகழ்ச்சியும், மறுநாள் செவ்வாய்க்கிழமை சுவாமி திருக்கல்யாணம், ஊர்வலம் நிகழ்ச்சிகளுக்கு பின் விரதத்தை முடித்து அன்னதானம் வழங்க விழாக்குழுவினர் ஏற்பாடுகள் செய்துள்ளனர். போடி: சுப்பிரமணியர் சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா கோயில் பரம்பரை அறங்காவலர் முத்துராஜன் தலைமையில் நடந்தது. செயல் அலுவலர் சுந்தரி முன்னிலை வகித்தார். தங்க கவச அலங்காரத்தில் முருகனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனின் தரிசனம் பெற்றனர். சஷ்டி விரதம் துவங்கும் வகையில் பக்தர்களுக்கு காப்பு கட்டப் பட்டது. கந்த சஷ்டி திருவிழாவை ஒட்டி முருகனுக்கு தினம் தோறும் சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாரதனைகள் நடக்கிறது.