ஊராட்சிகளில் ஆன்லைன் வரிவசூல் இணைய தளம் முடங்கியது
பெரியகுளம்: தேனி மாவட்டத்தில் ஊராட்சிகளில் 2025- -- 26 நடப்பாண்டிற்கான வரி வசூல் செய்வதற்கான இணையதளம் முடங்கியுள்ளது. இதனால் புதிய கட்டடங்களுக்கு வரி செலுத்த முடியாமலும், மின் இணைப்பு மற்றும் பெயர் மாற்றம் உள்ளிட்ட பணிகளும் முடங்கியுள்ளது. இதனால் ஊராட்சிகளில் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது.மாவட்டத்தில் 130 ஊராட்சிகள் உள்ளன. ஊராட்சிகளில் வீட்டு வரி வசூலுக்கு ஏற்ப அரசு வழங்கும் மானிய நிதியையும் சேர்ந்து பணியாளர்களுக்கு சம்பளம், பொதுமக்களுக்கான அடிப்படை வசதி திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. ஊராட்சிகளில் ஆண்டுக்கு ஒரு முறை வரி வசூலிக்கப்படுகிறது. 2022 ஏப் 1 முதல் ஊராட்சிகளில் ஆன்லைன் மூலம் வரி வசூல் செய்யப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஏப்.1ல் வரி வசூல் துவங்கும். ஆன்லைனில் வீட்டு வரி, குழாய் வரி, தொழில் வரி உட்பட 6 வகையான வரி செலுத்தப்படுகிறது. ஊராட்சிகளில் 2024-- 25க்கு பல ஊராட்சிகளில் நூறு சதவீதம் வசூலும், சில ஊராட்சிகளில் 80 சதவீதம் முதல் 90 சதவீத வரை வரி வசூலாகியுள்ளது.நடப்பாண்டில் 2025 --26க்கான வரி வசூல் 2025 ஏப் 1 முதல் வரி வசூல் துவங்கும். இந் நிலையில் ஏப்.1 முதல் ஆன்லைனில் வரி செலுத்துவதற்கான இணையதளம் முடங்கியுள்ளது. இதனால் மாவட்டத்தில் வைகாசி மாதங்களில் வீடு கிரகப்பிரவேசம் செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான கட்டடங்களுக்கு புதிதாக வீட்டு வரி செலுத்த முடியவில்லை. வீட்டு வரி செலுத்தாததால் வீடுகளுக்கு தற்காலிகமாக பெறப்பட்ட வணிக பயன்பாடு மின் இணைப்பு 'டேரிப் 5' ல் பெறப்பட்ட இணைப்பையே தொடர்ந்து பயன்படுத்துகின்றனர். வீட்டு வரி ரசீது இருந்தால்தான் வீடுகளுக்கான மின் இணைப்பு டேரிப் 1ல் இணைப்பு பெற முடியும். இரு மாதங்களாக இணைய தளம் முடங்கியதால் ஊராட்சிகளில் வரி வசூல் பாதித்து நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. நிதி நெருக்கடியால் அடிப்படை வசதி மேம்பாட்டு பணியும் மேற்கொள்ள முடியாத நிலை உருவாகி உள்ளது. பணியாளர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலை உருவாகி உள்ளது. பெரியகுளம் ஒன்றிய பி.டி.ஓ., மலர்விழி கூறுகையில்,'நடப்பாண்டிற்கான வரி வசூல் செய்வதற்கு கணினியில் பதிவேற்றம் நடந்து வருகிறது. விரைவில் வரிவசூல் பணி துவங்கும்,' என்றார்.-