பக்கத்து ஊர்களுக்கு டூவீலர்களில் சென்று குடிநீர் பிடித்துவரும் அவலம் க.புதுப்பட்டி பேரூராட்சி மக்கள் அவதி
கம்பம்: க.புதுப்பட்டியில் 3 மாதங்களாக குடிநீர் சப்ளை நடைபெறாத நிலையில் இங்குள்ள பெண்கள் அருகில் உள்ள ஊர்களுக்கு சென்று குடிநீர் பிடித்து வரும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.க . புதுப் பட்டி பேரூராட்சிக்கு குடிநீர் உட்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.14 கோடி வழங்கப்பட்டுள்ளது. மோட்டார் பராமரிப்பு, லைன் பராமரிப்பு என கூறி கடந்த 3 மாதங்களாக பொதுமக்களுக்கு முறையாக குடிநீர் வினியோகிக்காமல் பேரூராட்சி நிர்வாகம் சிரமத்திற்குள்ளாக்கி வருகிறது. தற்போது கோடை வெயில் கொளுத்தும் நிலையில் மக்களின் குடிநீர் தேவையும் அதிகரித்துள்ளது. ஆனால் குடிநீர் கிடைக்காததால் தோட்டங்களுக்கு தண்ணீர் பிடிக்க செல்கின்றனர். தற்போது ஒவ்வொரு வீட்டிலும் உள்ள ஆண்கள், பெண்கள் அருகில் உள்ள ஊர்களில் சென்று குடிநீர் பிடித்து டூவீலர்களில் கொண்டு வருகின்றனர். ஒருசிலர் 100 லிட்டர் பால் கேன்களில் பிடித்து ஆட்டோவில் வைத்து கொண்டு வருகின்றனர்.குடிநீர் தட்டுப்பாட்டை பார்த்து கொண்டு,' இப் பணி குடிநீர் வாரியத்தின் வேலை என்றும் நாங்கள் என்ன செய்ய முடியும்', என்றும் பேரூராட்சி கையை விரிக்கின்றனர். கலெக்டர் இந்த பிரச்னையில் தலையிட்டு மக்களின் தாகம் தீர்க்க உதவிட வேண்டும் என கோரியுள்ளனர்.