சின்ன வாய்க்கால் உடைப்பை போலீசார் துணையுடன் அடைத்த நீர்வளத்துறை
கம்பம்: கம்பம் சின்ன வாய்க்காலில் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட உடைப்பை, நேற்று காலை போலீஸ் பாதுகாப்புடன் அடைத்தனர். மழை வெள்ளத்தால் கம்பம் பள்ளத்தாக்கில் வரலாறு காணாத சேதம் ஏற்பட்டுள்ளது. ஆறுகள், வாய்க்கால் கரைகள் உடைந்து, அறுவடைக்கு தயாராக இருந்த நெல் கதிர்கள் பாதிக்கப்பட்டன. கம்பம், உத்தமபாளையம் சின்னமனூர் வட்டாரங்களில் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து பல்துறை அதிகாரிகள் கணக்கெடுத்து வருகின்றனர். இதற்கிடையே உடனடியாக செய்ய வேண்டிய வேலைகளை நீர்வளத்துறை மேற்கொண்டு வருகிறது. அதன்படி கம்பம் அருகே உள்ள மஞ்சக்குளத்தில் கருப்பசாமி கோயில் அருகில் சின்ன வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டது. எனவே இந்த உடைப்பை சரி செய்ய நேற்று முன்தினம் அப்பகுதிக்குச் சென்ற நீர்வளத் துறையினர் அங்குள்ள புறம்போக்கு நிலத்தில் இருந்து மண்ணை அள்ளி, வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். அதற்கு குறிப்பிட்ட சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். வேறு வழியின்றி அதிகாரிகள் திரும்பி விட்டனர். நேற்று காலை கம்பம் தெற்கு போலீசார் உதவியுடன் அங்கு சென்ற நீர்வளத்துறையினர், அதே புறம்போக்கு நிலத்தில் இருந்து மண்ணை எடுத்து, வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பை சீரமைத்தனர்.