| ADDED : பிப் 25, 2024 04:12 AM
தேனி : தேனி உழவர் சந்தையில் தக்காளி ஒரு கிலோ ரூ.12க்கு விற்பனையானது. இந்த விலை மேலும் குறைய வாய்ப்புள்ளதாக வேளாண்துறையினர் தெரிவித்துள்ளனர்.மாவட்டத்தில் 1250 எக்டேரில் தக்காளி சாகுபடி பயிரிடப்பட்டுள்ளது. இதில் தற்போது 250 எக்டேரில் அறுவடை நடந்து வருகிறது. தேவாரம், சின்னமனுார், நாகலாபுரம் மார்கெட் மூலம் மாவட்டத்தில் அறுவடை செய்யப்படும் தக்காளிகள் தமிழகம், கேரளாவிற்கு விற்பனைக்கு செல்கிறது. பிப்., 12ல் தேனி உழவர் சந்தையில் தக்காளி கிலோ ரூ.25 முதல் ரூ.30 வரை விற்பனையானது. இந்நிலையில் நேற்று ஒரு கிலோ ரூ.12 முதல் ரூ.15 வரை விற்பனையானது. மொத்த மார்க்கெட்டில் 15 கிலோ எடை கொண்ட பெட்டிகள் ரூ.120 முதல் ரூ.150 வரை விற்பனை ஆகிறது.தோட்டக்லைத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'தக்காளி விளைச்சலுக்கு ஏற்ற சூழல் நிலவுகிறது. அதிக வெயில், போதிய அளவு நீர் உள்ளதால் இரு மாதங்களுக்கு தக்காளி விலை குறைய வாய்ப்பு குறைவு. மாநிலம் முழுவதும் தக்காளி விளைச்சல் அதிகம் உள்ளதால் இங்கிருந்து பிற மாவட்டங்களுக்கு விற்பனைக்கு செல்வதில்லை. இரு மாதங்களில் மழை பொழிவு இருந்தால் மட்டுமே விலை உயர வாய்ப்புள்ளது. மதிப்பு கூட்டு பொருளாக மாற்றி பயன்படுத்தினால் விலை அதிகரிக்கும் நேரத்தில் பயன்படுத்தலாம். என்றனர்.