சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்க டூவீலர் பிரசார ஊர்வலம்
தேனி: சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கம் சார்பில், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என, சென்னை தலைமை செயலகம் நோக்கி டூவீலர் விழிப்புணர்வு ஊர்வலம் தேனியில் இருந்து புறப்பட்டுள்ளது.கன்னியாகுமரியில் புறப்பட்ட டூவீலர் விழிப்புணர்வு பிரசார ஊர்வலம் மாநில இணை ஒருங்கிணைப்பாளர் முகமது ஆசீப் தலைமையில் நேற்று ஆண்டிபட்டி பஸ் ஸ்டாண்டு வந்தது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் விஸ்வநாதன் தலைமையில் வரவேற்பு அளித்தனர். அரசு மருத்துவமனை, க.விலக்கு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, தேனி கர்னல் ஜான் பென்னிகுவிக் பஸ் ஸ்டாண்ட், அரசு ஊழியர் சங்க கட்டடம், திட்டச்சாலை ரோடு உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள், பெண்கள், பஸ் பயணிகள், ஆட்டோ டிரைவர்கள், வணிக கடை உரிமையாளர்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர். பின் தேனி நகராட்சி, அல்லிநகரம் வழியாக லட்சமிபுரம், தாமரைக்குளம், பெரியகுளம், தேவதானபட்டி வழியாக திண்டுக்கல் மாவட்டம் சென்றனர்.