சீரமைக்கப்படாத மண்சரிவால் போக்குவரத்திற்கு இடையூறு
மூணாறு: மூணாறு அருகே ஏற்பட்ட மண்சரிவை சீரமைக்காததால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது.மூணாறு உடுமலைபேட்டை ரோட்டில் பெரியவாரை எஸ்டேட் பகுதியில் உள்ள வனத்து சின்னப்பர் குருசடி அருகே நான்கு நாட்களுக்கு முன் பலத்த மழையில் மண்சரிவு ஏற்பட்டது. அதில் மரங்களின் அடி பகுதி வேருடன் சாய்ந்து ரோட்டில் விழுந்தன. பருவ மழை காலங்களில் மண் சரிவுகளை உடனுக்குடன் சரி செய்யும் வகையில் மண் அள்ளும் இயந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு சீரமைப்பு பணிகளை சம்பந்தப்பட்ட துறையினர் செய்ய வேண்டும் என விதிமுறைகள் உள்ளன.ஆனால் மண்சரிவு ஏற்பட்டு 4 நாட்கள் ஆகியும், அதனை சீரமைக்காமல் பொதுப் பணித்துறை அதிகாரிகள் அலட்சியமாக உள்ளனர்.அந்த வழியாகத்தான் இரவிகுளம் தேசிய பூங்கா, லக்கம் நீர்வீழ்ச்சி உட்பட முக்கிய சுற்றுலாப் பகுதிகளுக்கும், மறையர், காந்தலுார் உட்பட பல்வேறு எஸ்டேட் பகுதிகளுக்கும் செல்ல வேண்டும் என்பதால் நுாற்றுக் கணக்கில் வாகனங்கள் சென்று வருகின்றன.அவை மண்சரிவு ஏற்பட்ட பகுதியில் செல்லும் போது போக்குவரத்து இடையூறு ஏற்படுவதால் சீரமைப்புப் பணிகளை செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.