உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஊரக பகுதிகளில் பயன் இல்லாத சுகாதார வளாகங்களை சீரமைக்க வேண்டும்: திறந்தவெளியை பயன்படுத்துவதால் நோய் பாதிக்கும்அவலம்

ஊரக பகுதிகளில் பயன் இல்லாத சுகாதார வளாகங்களை சீரமைக்க வேண்டும்: திறந்தவெளியை பயன்படுத்துவதால் நோய் பாதிக்கும்அவலம்

தேனி: பெரும்பாலான கிராமங்களில் சுகாதார வளாகங்கள் இருந்தாலும், அதனை பயன்படுத்துவோர் மிக குறைவாக உள்ளனர். ஊரக பகுதிகளில் பலர் திறந்த வெளியை பயன்படுத்துவதுவதால் குழந்தைகள் குடற்புழு நோய் பாதிப்பிற்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.மாவட்டத்தில் 130 ஊராட்சிகளில் மத்திய, மாநில அரசு திட்டங்களில் மானியத்துடன் பொது சுகாதார வளாகங்கள், வீடுகளில் தனிநபர் கழிப்பறைகள் அமைக்கப்படுகிறது. கிராமங்களில் சில வீடுகளில் மட்டும் கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன. பலர் பொது சுகாதார வளாகங்களை பயன்படுத்துகின்றனர். பல ஊராட்சிகளில் பொது சுகாதார வளாகங்கள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை. சில கிராமங்களில் சில கி.மீ., துாரம் கடந்து அமைக்கப்பட்டுள்ளன.நீண்ட துாரம் கடந்து செல்லவேண்டும் என்பதால் யாரும் பயன்படுத்த முன் வருவதில்லை. அவை சமூக விரோத செயல்களுக்கு பயன்படும் இடமாக மாறி உள்ளது. மக்கள் அதிக நடமாட்டம் உள்ள பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சுகாதார வளாகங்கள் திறந்த சில மாதங்கள் பயன்படுகின்றன. அதன்பின் மோட்டார் பழுது, தண்ணீர் பற்றாக்குறை, முறையாக சுத்தம் செய்யாததது என காரணம் கூறி மூடுவிழா நடத்தி விடுகின்றனர். இதனை சீரமைக்க ஊராட்சிகளும் முனைப்பு காட்டுவதில்லை. இதனால் மாவட்டத்தில் பல பொது சுகாதார வளாகங்கள் காட்சி பொருளாகவும், பல சுகாதார வளாகங்கள் மதுபாராகவும், போதை பொருள் விற்கும் இடமாக மாறிவிட்டன.சுகாதார வளாகங்களை பயன்பாடு இல்லாததால் பலர் ரோட்டோரங்களையும், நீர் நிலைகளையும் திறந்த வெளி கழிப்பிடமாக்கி அசுத்தம் செய்கின்றனர்.மாவட்டத்தில் முழு சுகாதார திட்டம், துாய்மை இந்தியா திட்டம், தனிநபர் சுகாதார வளாகங்கள் என பல்வேறு திட்டங்களை துவங்குவதில் உள்ள ஆர்வம், இத் திட்டங்கள் முறையாக பயன்பாட்டில் உள்ளதா என உரிய அதிகாரிகள் கவனிப்பது இல்லை. இதனால் அரசின் நிதி பலலட்சம் ரூபாய் வீணாகிறது. மேலும் திறந்த வெளியை பயன்படுத்துவதால் குழந்தைகள், பெண்கள் குடற்புழு தாக்குதலுக்கு ஆளாகும் நிலை உள்ளது. குடற்புழு தாக்கத்தால் ரத்தசோகை, உடல்சோர்வு ஏற்படுகிறது.குழந்தைகள், பெண்கள் உடல்நலமும், பொது சுகாதாரம் பாதுகாக்க பயன்பாட்டில் இல்லாத சுகாதார வளாகங்களை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். சுகாதார வளாகங்களை முறையாக பராமரிப்பது, அதனை பயன்படுத்துவது பற்றி பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை