வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம் தேர்திருவிழா மே 9ல் நடக்கிறது
தேனி:தேனி மாவட்டம், வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா நேற்று துவங்கியது. முக்கிய நிகழ்வான தேர் திருவிழா மே 9ல் நடக்கிறது. வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா தென்மாவட்டங்களில் பிரசித்தி பெற்றது. தமிழகம் மற்றும் கேரளாவில் இருந்தும் பக்தர்கள் பங்கேற்பார்கள். சித்திரை திருவிழாவிற்காக கோயிலில் கம்பம் நடல் ஏப்.,16ல் நடந்தது. இக் கம்பத்திற்கு தினமும் ஏராளமான பக்தர்கள் முல்லைப்பெரியாற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து ஊற்றி வழிபட்டனர். திருவிழா நேற்று துவங்கியது. இரவு கோயில் வீட்டில் இருந்து கோயிலுக்கு அம்மன் பவனி வந்தார். இன்றும், நாளையும் முத்து, புஷ்ப பல்லக்கில் அம்மன் வீதி உலா நடக்கிறது. தேர்திருவிழா மே 9ல் நடக்கிறது. ஏராளமான விரதமிருந்த பக்தர்கள் அக்னிசட்டி எடுத்தல், ஆயிரம் கண்பானை, மாவிளக்கு நேர்த்திகடன்களை செலுத்தி வருகின்றனர்.திருவிழா துவங்கி உள்ளதால் அம்மன் கோயில் நடை கோயில் மே 13 இரவு வரை திறந்திருக்கும். பக்தர்கள் 24 மணிநேரமும் தரிசனம் செய்யலாம். பாதுகாப்பு பணியில் எஸ்.பி., சிவபிரசாத் தலைமையில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரம் போலீசார் ஈடுபட்டுள்ளனர். தேனி, பெரியகுளம், போடி பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.