வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி: கட்சியினருடன் ஆலோசனை இண்டி கூட்டணி எதிர்ப்பு, அ.தி.மு.க., ஆதரவு
தேனி: தேனி மாவட்டத்தில் வாக்காளர்பட்டியில் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் பற்றி அனைத்து அரசியல் கட்சியினருடன் கலெக்டர் ரஞ்ஜீத்சிங் ஆலோசனை நடத்தினார். அதில் அ.தி.மு.க.,வினர் ஆதரவு தெரிவித்தனர். காங்., கம்யூனிஸ்ட், ஆம்ஆத்மி கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தலைமையில் வாக்காளர்பட்டியில் சிறப்பு தீவிர திருத்தப்பணி ஆலோசனைக்கூட்டம் நடந்தது. பெரியகுளம் சப் கலெக்டர் ரஜத்பீடன், கலெக்டர் நேர்முக உதவியாளர் முத்துமாதவன் முன்னிலை வகித்தனர். தமிழகத்தில் 2002க்கு பின் தீவிர சிறப்பு திருத்த பணிகள் நடக்க உள்ளது. பணியின் போது வீடுகளுக்கு வாக்காளர் விபரங்கள் அச்சிடப்பட்ட படிவங்கள் பி.எல்.ஓ.,க்கள் மூலம் வழங்கப்படும் அதனை பூர்த்தி செய்து வாக்காளர்கள் வழங்க வேண்டும். எவ்வித ஆவணங்களையும் பி.எல்.ஓ.,க்களிடம் தர அவசியம் இல்லை. இந்த பணி நவ., 4 முதல் டிச.,4வரை நடக்கிறது என அதிகாரிகள் கூறினர். வெங்கடேசன் (மார்க்சிஸ்ட் கம்யூ.,): தேர்தலுக்கு 6 மாதங்கள் உள்ள நிலையில் தீவிர திருத்தம் மேற்கொள்ள வேண்டிய அவசியம் என்ன. திட்டமிட்டு தேர்தல் ஆணையம் இதனை செய்கிறது. ஒரு மாதத்தில் இந்த பணிகளை முடிக்க இயலுமா. பருவமழை நேரத்தில் இந்த பணி பொதுமக்களை அவதிக்குள்ளாக்கும். பெருமாள் (இந்திய கம்யூ.,): தீவிர திருத்த பணிகள் நடத்த வேண்டாம். இது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. விவேக் பாலாஜி (ஆம் ஆத்மி கட்சி): ஆதார் குடியுரிமை சான்று அல்ல என தெரிவித்துள்ள போது திருத்த பணி படிவத்தில் ஆதார் எண் கேட்பது எதற்காக. ஆதார் இணைக்க கூடாது. நோட்டா பற்றிய விழிப்புணர்வு அதிகம் ஏற்படுத்த வேண்டும். தவறாக நீக்கினால், நீக்கிய அதிகாரிகள், அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். திருத்த பணிகள் மேற்கொள்ள கூடுதல் காலம் எடுத்துக்கொள்ள வேண்டும். செல்லதுரை, (தே.மு.தி.க.,): வாக்காளர் பட்டியலில் இறந்தவர்கள் பெயர்கள் பல ஆண்டுகளாக நீக்கப்படமால் உள்ளது. இதனால் முறைகேடுகள் நடக்கின்றன. சிலருக்கு இரு இடங்களில் ஓட்டுகள் உள்ளது இதனை கண்டறிந்து தடுக்க வேண்டும். ஓட்டுக்கு பணம் வழங்குபவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் இல்லை. சில ஆண்டுகளுக்கு முன் இந்த தீவிர திருத்த பணியை துவங்கி இருக்க வேண்டும் என்றார். ஜெயராமன் (அ.தி.மு.க.,): தீவிர திருத்த பணிகள் மேற்கொள்ள எங்கள் கட்சி ஆதரவு அளிக்கிறது. எந்த பணியையும் குறிப்பிட்ட காலத்திற்குள் மேற்கொள்ள வேண்டும். அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவோம் என்றார். வி.சி., பகுஜன்சமாஜ், காங்., நிர்வாகிகள் சிறப்பு திருத்த பணிகள் மேற்கொள்ள வேண்டாம். எந்த கட்சியும், பொதுமக்களும் இப்பணி மேற்கொள்ள கோரிக்கை வைக்கவில்லை என்றனர். கலெக்டர்: வரைவு பட்டியில் வெளியிடப்படும் பொழுது யாருடைய பெயராவது நீக்கப்பட்டிருந்தால் மேல்முறையீடு செய்யுங்கள் பெயர் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். இணையம் மூலம் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து வழங்கலாம் என்றார். தேர்தல் பிரிவு தாசில்தார் செந்தில்குமார், துணை தாசில்தார்கள் ராஜா, செந்தில் கூட்டத்தை ஒருங் கிணைத்தனர்.