கலர் பொக்கே தயாரிப்பிற்காக வெளி நாடு செல்லும் போடி நாணல் பூக்கள் பூக்கள் சேகரிப்பில் தொழிலாளர்கள் ஆர்வம்
போடி : ' கலர் பொக்கே ' தயாரிப்பிற்காக போடி பகுதியில் வளர்ந்துள்ள நாணல் பூக்களை சேகரித்து வெளி நாடுகளுக்கு அனுப்புவதில் விவசாய தொழிலாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆறுகள், கண்மாய், நீர் நிலை கரை ஓரங்களில் வளர்ந்துள்ள நாணல் பூக்கள் பார்ப்பதற்கு அழகாகவும், வளைந்து கொடுக்கும் தன்மை உடையது. உயரமாக வளரும் நாணல் பூக்கள் அலங்காரத்திற்கும், அதன் தட்டைகள் கூரை அமைக்க பயன்படுகின்றன. சமீபமாக நாணல் பூக்களில் பொக்கே தயாரிக்க அதிகம் பயன்படுகின்றன. இதனால் போடி, கோடங்கிபட்டி, உப்புக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் நாணல் பூக்களை சேகரிப்பதில் விவசாய தொழிலாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். நாணல் பூக்களை தட்டை உடன் வெட்டி சேகரிக்கின்றனர். காய வைக்காத 100 எண்ணிக்கை கொண்ட பூக்கள் ரூ. 175 முதல் 200 வரையும், தரம் பிரித்த நாணல் பூக்கள் ரூ. 200 விலைக்கு தூத்துக்குடியில் உள்ள மொத்த வியாபாரகளுக்கு அனுப்புகின்றனர். அங்கு அவர்கள் ஒவ்வொரு பூக்களுக்கும் ஒரு வர்ணம் பூசி உலர வைத்து மொத்தமாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றனர். மரக்காமலை,விவசாயி மீனாட்சிபுரம் கூறியதாவது: திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் பகுதியில் வெற்றிலை கொடிக்கால் நாற்றங்காலில் நடவு பணிக்காக நாணல் தட்டையும், திருமணம், சர்ச் அலங்காரங்த்திற்கு எர்ணாகுளம், கொச்சின், திருப்பூர், கோவை பகுதிக்கு தட்டையுடன் நாணல் பூக்களை அனுப்புகின்றோம். பொக்கே தயாரிப்பிற்காக நாணல் பூக்கள் கேட்டு தூத்துக்குடியில் இருந்து ஆடர்கள் வரும். அவர்களுக்காக நாணல் பூக்களை வெட்டி நன்கு உலர்த்தி காய வைத்து அனுப்புகின்றோம். நாணல் பூக்கள் ஒன்றுக்கு ரூ.இரண்டு வீதம் 100 பூக்கள் கொண்ட கட்டு ரூ.200 க்கு அனுப்புகின்றோம். அங்கு பூக்களை வர்ணங்களாக மதிப்பு கூட்டி பொக்கே தயாரிப்பிற்காக வெளி நாடுகளுக்கு அனுப்புகின்றனர். ஆர்டரின் பேரில் வருமானம் கிடைப்பதால் இத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றோம் என்றார்.