உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / ஊழலை அம்பலப்படுத்திய சமூக ஆர்வலருக்கு சரமாரி வெட்டு

ஊழலை அம்பலப்படுத்திய சமூக ஆர்வலருக்கு சரமாரி வெட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் சுரங்கத் துறை, மாநகராட்சி, மின்வாரியம், உள்ளூர் திட்ட குழும அதிகாரிகளின் ஊழல்களை அம்பலப்படுத்திய சமூக ஆர்வலர் பெர்டின் ராயன் நேற்று மர்ம நபர்களால் சரமாரியாக வெட்டப்பட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சையில் உள்ளார்.திருநெல்வேலி மார்க்கெட் பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் பெர்டின் ராயன், 35. கட்டுமான நிறுவனம் நடத்தி வருகிறார். நேற்று திருநெல்வேலி அரசு மருத்துவமனை பின்புற சாலையில் உள்ள கிளப்பில் பேட்மின்டன் விளையாட, அதிகாலை 5:40 மணிக்கு காரில் சென்றார்.பைக்கில் பின் தொடர்ந்து வந்த நபர், அரங்க வாசலில் காரை மறித்து, பெர்டின் ராயனை அரிவாளால் சரமாரியாக வெட்டினார். தலை, முதுகு, இரண்டு கைகளில் ரத்தம் சொட்ட கிளப் உள்ளே காரை ஓட்டினார் ராயன்.வெட்டிய நபர் உள்ளே வராமல் ஓடிவிட்டார். தலையில் பலத்த வெட்டு காயத்தால் நிறைய ரத்தம் வெளியேறிய நிலையில், அரசு மருத்துவமனையில் ராயன் சேர்க்கப்பட்டார். டீன் ரேவதி தலைமையில் டாக்டர்கள் குழு சிகிச்சை அளித்தது. உயிருக்கு ஆபத்தான நிலையில், மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பின்னணி என்ன?பெர்டின் ராயனின் பூர்வீகம் துாத்துக்குடி மாவட்டத்தின் கடல்புரம். மீன்பிடி தொழில் செய்யும் பரதவர் அமைப்பின் மாநில நிர்வாகியாக உள்ளார். பட்டதாரியான இவர் பெங்களூரு சட்ட கல்லுாரி ஒன்றில் இறுதியாண்டு பயின்று வருகிறார்.திருநெல்வேலியில் கட்டுமான நிறுவனம் நடத்தியபடி, தகவல் அறியும் உரிமை சட்டமான ஆர்.டி.ஐ., வாயிலாக நெல்லையில் அரசு துறைகளில் நடக்கும் ஊழல்களை கண்டறிந்து அம்பலப்படுத்தி வந்தார். வழக்கு தொடர்ந்து குறைகளுக்கு நிவாரணம் தேடுவதிலும் ஆர்வம் காட்டினார்.சாராள் தக்கர் கல்லுாரி அருகே செயல்பட்ட நான்கு மாடி தனியார் மருத்துவமனையில் ஒரு மருத்துவமனைக்கான எந்த அடிப்படை கட்டமைப்பும் இல்லை என்பதை ஆதாரங்களுடன் கண்டறிந்து ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். கோர்ட் உத்தரவுப்படி அந்த மருத்துவமனை மூடப்பட்டது. அது செயல்பட அனுமதி வழங்கிய உள்ளூர் திட்ட குழும அதிகாரிகள் சிக்கலில் உள்ளனர்.முறையாக ஆய்வு செய்யாமல் கட்டடங்களுக்கு அதிகாரிகள் அனுமதி அளிப்பதும், அதற்காக லட்சக்கணக்கில் லஞ்சம் பெறுவதும் தொடர்ந்து நடப்பதாக கண்டுபிடித்து அம்பலப்படுத்தினார்.அந்த கட்டடங்களால் அரசுக்கு பல கோடிகள் இழப்பு ஏற்பட்டதுடன் தவிர, போக்குவரத்து நெரிசலால் பொதுமக்களும் வெகுவாக பாதிக்கப்பட்டனர். திருநெல்வேலி மாநகராட்சி எல்லைக்குள் அவ்வாறு 122 பெரிய கட்டடங்கள் அனுமதி பெறாமல் கட்டப்பட்ட தகவல் வெளிச்சத்துக்கு வந்தது.நிதி இழப்புவெளிநாடுகளில் இருந்து அனுப்பப்படும் கருப்பு பணத்தால் பழைய கட்டடங்களை வாங்கி இடித்து, அரசு துறைகளில் எந்த அனுமதியும் பெறாமல் பெரிய பெரிய வணிக வளாகங்களை கட்டி, பெரும் லாபத்துடன் அவற்றை விற்று வந்த ஒரு கும்பல் குறித்து தகவல் சேகரித்து மாநகராட்சியில் புகார் அளித்தார்.அவர் அளித்த தகவல்களால் அதிர்ச்சி அடைந்த மாநகராட்சி நிர்வாகம், நுாற்றுக்கு மேற்பட்ட கட்டட உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது.மேல் நடவடிக்கை குறித்தும் ராயன் துருவியதால், மேலும் இரண்டு தடவை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பி உரிமையாளர்களிடம் விளக்கம் கேட்டது.எனினும், நோட்டீசை தாண்டி மேல் நடவடிக்கை எதுவும் இல்லாமல் தற்போது அந்த விஷயம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.ஒரு நிறுவனம் ரோடு போட மாநகராட்சியில் கான்ட்ராக்ட் எடுத்தது. கான்ட்ராக்ட் எடுப்பவர், தங்கள் நிறுவனம் பெயரில் லாரிகள், இயந்திரங்கள், உபகரணங்கள் வைத்திருக்க வேண்டும் என்பது விதி.எதுவுமே சொந்தமாக இல்லாத அந்த நிறுவனம், அனைத்தும் இருப்பதாக போலியாக ஒரு பட்டியலை மாநகராட்சியிடம் கொடுத்தது. இந்த முறைகேடு குறித்து புகார் அளித்ததால், நிறுவனத்திற்கு அளித்த டெண்டரை மாநகராட்சி ரத்து செய்ய நேர்ந்தது.மாநகராட்சியை ஏமாற்ற முயற்சித்த நிறுவனத்தின் மீது நடவடிக்கையும் எடுக்குமாறு கமிஷனர் தாக்கரே உத்தரவிட்டார்.அதன்படி, அதிகாரிகள் புகார் அளித்து வழக்கு பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கின் விசாரணை நேற்று ஜங்ஷன் போலீஸ் ஸ்டேஷனில் நடக்க இருந்தது. அதில் பெர்டின் ராயன் சாட்சியம் அளிக்க இருந்தார்.கல்குவாரிகள்திருநெல்வேலி மாவட்டத்தில் 50க்கும் மேற்பட்ட கல் குவாரிகள் உள்ளன. சில ஆண்டுகளுக்கு முன் அடை மிதிப்பான்குளம் கல் குவாரியில் விபத்து நடந்து, இடிபாடுகளில் சிக்கி தொழிலாளர்கள் பலியாகினர்.மாநில அளவில் சுரங்கத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி அறிக்கை கொடுத்தனர். அதன் அடிப்படையில் 50 குவாரிகளுக்கு அப்போதைய கலெக்டர் விஷ்ணு அனுமதி மறுத்தார்.ஆனால், அனைத்து குவாரிகளும் தற்போது மீண்டும் இயங்கி வருகின்றன. கல் குவாரிகளில் சிறுவர்களை பணி அமர்த்தக் கூடாது என்ற விதி இருந்தும், சில தினங்களுக்கு முன் மானுார் குவாரியில் 15 வயது வட மாநில சிறுவன் இயந்திரத்தில் சிக்கி பலியானார்.எனினும், யார் மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த விவகாரங்களையும் ராயன் தோண்டி எடுத்து சுரங்க துறைக்கு புகார் அனுப்பினார்.சில தியேட்டர்களிலும், வணிக நிறுவனங்களிலும் நேரடி ஆய்வு செய்யாமலே மின் இணைப்பு வழங்கியது குறித்து மின்வாரிய விஜிலென்சில் இவர் அளித்த புகார் மீதும் நேற்று மதியம் விசாரணை நடக்க இருந்தது. அதிலும் அவர் சாட்சியம் கூற இருந்தார்.கொலை மிரட்டல்திருநெல்வேலி மாநகராட்சியில் 1,000 கோடி ரூபாய் மதிப்பில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் கடந்த ஆட்சியில் நடந்தன.அந்த பணிகள் இன்றும் தொடர்கின்றன. அவற்றில் ஜங்ஷன் பஸ் ஸ்டாண்ட் கட்டடத்திற்கு உள்ளூர் திட்ட குழுமம் உள்ளிட்ட எந்த துறைகளிலும் அனுமதி பெறவில்லை.இது குறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்தும், விதிமுறைகளை பின்பற்றாமல் அண்மையில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி பஸ் ஸ்டாண்டை திறந்து வைத்தார்.இதுகுறித்து ராயன் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், கலெக்டர் உள்ளிட்ட அனைத்து தரப்பு அதிகாரிகளுக்கும் ஐகோர்ட் நோட்டீஸ் அனுப்பியது.மாநகராட்சி, உள்ளூர் திட்ட குழுமம் விஷயங்களில் தலையிடாதீர்கள் என, பெர்டின் ராயனுக்கு தொடர்ந்து மிரட்டல்கள் வந்தன.அதுகுறித்து திருநெல்வேலி போலீஸ் அதிகாரிகளுக்கு அவர் தகவல் தெரிவித்துள்ளார். கொலை மிரட்டல் இருப்பதால் போலீஸ் பாதுகாப்பு வேண்டுமென மனு கொடுத்திருந்தார்.போலீசார் கண்டு கொள்ளவில்லை. தற்போது வெட்டுக் காயங்களுடன் திருவனந்தபுரம் மருத்துவமனையில் உயிருக்கு போராடுகிறார்.

தொடரும் கொலைவெறி தாக்குதல்

 ↓திருநெல்வேலியை சேர்ந்த வழக்கறிஞர் பிரம்மா தனியார் மருத்துவமனைகள், ஹோட்டல்கள், அதிக கட்டணம் வசூலிப்பவர்கள் குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தகவல் பெற்று வழக்கு தொடர்ந்தார். நுகர்வோர் கோர்ட்களில் தொடரும் பல வழக்குகளில் அவர் பெற்ற தீர்ப்புகள் முன்னோட்டமாக உள்ளன. இதனால் அவர் மீது கடுமையான தாக்குதல் நடத்தினர். ↓தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு அருகே அகரம் கிராமத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன், 40; பத்தாம் வகுப்பு பயின்றவர். ஆடு மேய்க்கிறார். முறப்பநாடு தாமிரபரணி ஆற்றில் மணல் கொள்ளை குறித்து போலீசில் அடிக்கடி புகார் செய்தார். அவருக்கு கொலை மிரட்டல் வந்தது. மதுரை ஐகோர்ட் நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி 2020ல் தாமாக முன்வந்து வழக்கு எடுத்து, அவருக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கினர். நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக துப்பாக்கி ஏந்திய காவலர், பாலகிருஷ்ணன் ஆடு மேய்க்க செல்லும் இடங்களிலும் அவரை பின்தொடர்ந்து சென்று பாதுகாப்பு அளித்து வருகிறார் ↓முறப்பநாடு தாமிரபரணி ஆற்றில் நடந்து வந்த மணல் கடத்தல் குறித்து போலீசில் புகார் அளித்த கிராம நிர்வாக அதிகாரி லுார்து பிரான்சிஸ் 2023 ஏப்., 25-ல் மணல் கடத்தும் கும்பலால் வி.ஏ.ஓ., அலுவலகத்திற்குள் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். ஆனாலும், தென்காசி, திருநெல்வேலி, துாத்துக்குடி மாவட்டங்களில் தாமிரபரணி மணல் கடத்தல், கனிம வள கடத்தல் மீது இன்னமும் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை.

பேராசிரியர்களும்

தப்பவில்லைதிருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில் ஆங்கிலத்துறை இணை பேராசிரியராக நாகர்கோவிலை சேர்ந்த ரமேஷ், துணை பேராசிரியராக ஜெனிதா பணியாற்றுகின்றனர். பல்கலையில் பி.எட்., மாணவர் சேர்க்கையில் நடந்த முறைகேடுகள் குறித்து சமூக ஆர்வலர் சுடலைக்கண்ணு புகாரில் விஜிலென்ஸ் விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் ரமேஷ், ஜெனிதா சாட்சியம் அளிக்கக்கூடாது என மிரட்டி சில நாட்களுக்கு முன் இருவரையும் மூன்று பேர் கும்பல் கத்தியால் குத்தி காயப்படுத்தினர். அவர்களிடம் இருந்து ஏ.டி.எம்., கார்டுகள், மொபைல் போன்களை பறித்தனர். ஜெனிதாவின் கார்டை பயன்படுத்தி 15,000 ரூபாய் எடுத்துள்ளனர். பணம் எடுத்த நபர்களின் படங்கள் வங்கி ஏ.டி.எம்., சிசிடிவியில் தெரிந்த பிறகும் அந்த வழக்கில் யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. மேல் நடவடிக்கை இல்லாமல் வழக்கு மூடப்பட்டு விட்டது.

ஜாதி அமைப்பு -- போலீஸ் கைகோர்ப்பு

திருநெல்வேலி, துாத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் ஜாதிய அமைப்புகளும், போலீசும் கைகோர்த்து செயல்படுகின்றனர். குற்றவாளிகளை கைது செய்ய சம்பந்தப்பட்ட ஜாதியை சேர்ந்த போலீசாரை தான் பயன்படுத்த வேண்டி உள்ளது. பிரேத பரிசோதனைக்கு பின் உடலை வாங்க மாட்டோம் என மறுத்து யாராவது போராட்டம் நடத்தும்போது, அவர்களின் ஜாதியை சேர்ந்த அதிகாரிகள் வந்து பேசினால் மட்டுமே பிரச்னை முடிவுக்கு வருகிறது. திருநெல்வேலியில் 1990களில் நடந்த ஜாதிய மோதல்களின் போது குறிப்பிட்ட மூன்று ஜாதிகளை சேர்ந்தவர்கள் உயர் பொறுப்பில் இந்த மூன்று மாவட்டங்களிலும் பணியாற்ற கூடாது என, டி.ஜி.பி., உத்தரவிட்டார். இதனால் பலர் சேலம், தர்மபுரி, தஞ்சை என, வெளி மாவட்டங்களுக்கு சென்றனர். ஆனால், தற்போது ஜாதிய அதிகாரிகளின் ஆதிக்கம் மேலோங்கி நிற்பதால் முக்கிய ஜாதிகளை சாராதவர்களின் பாடு சிக்கலாக உள்ளது.தென்காசி, திருநெல்வேலி, துாத்துக்குடி மாவட்டங்களில் பல உளவுத்துறை அதிகாரிகள் பத்தாண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து பணிபுரிவதால் எந்த சம்பவமும் அவர்களுக்கு பெரிய விஷயமாக தெரிவதில்லை. இது சகஜம்தானே என்கின்றனர். சமூக ஆர்வலர்கள் தாக்கப்பட்டால் அவர்கள் மீது பணம் கேட்டு மிரட்டியதாகவோ, பெண் தகராறு, குடும்ப பிரச்னையில் தாக்குதல் என்றோ ஏதாவது சொல்லி வழக்கை திசை திருப்புகின்றனர். உளவுத்துறை மட்டுமின்றி எஸ்.பி., பிரிவு எனப்படும் தனிப்பிரிவு போலீசாரும் டிரான்ஸ்பர் என்றால் என்ன என்பது மறந்துபோகும் அளவுக்கு வேர்விட்டு இருப்பதால், அதிரடியாக எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.

துாத்துக்குடி 'பெஸ்ட்'

சில ஆண்டுகளில் தென் மாவட்டங்களில் அதிக எண்ணிக்கையில் குண்டர்கள் கைது செய்யப்பட்டிருப்பதும், கஞ்சா வழக்குகள் தொடரப்பட்டிருப்பதும், ஜாதி சம்பவங்களில் முன்னோட்டமாக குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு இருப்பதும் துாத்துக்குடி மாவட்டத்தில் மட்டும்தான் நடந்துள்ளது.திருநெல்வேலி மாவட்டத்தில் பெரிய கொள்ளை சம்பவங்கள் நடந்தாலும் வழக்குகள் பதிவு செய்யப்படுவதே இல்லை. பதிவு செய்யப்பட்டாலும் அதில் சொத்து மீட்பு நடவடிக்கைகள் இல்லை. திருநெல்வேலி, துாத்துக்குடி மாவட்டங்களில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக வீரவநல்லுார், ஸ்ரீவைகுண்டம் போன்ற இடங்களில் மணல் கடத்தலை தடுக்க முயற்சித்த சமூக ஆர்வலர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். தற்போது தகவல் அறியும் உரிமை சட்டத்தில் வழக்கு தொடுப்பவர்கள் மீதும் தாக்குதல் நடக்க துவங்கி இருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

karupanasamy
மே 06, 2024 18:25

பார்றா நெஞ்சுக்கு நீதின்னு போஸ் கொடுத்தவன் பண்ணுற அக்கிரமத்த தமிழா போதை மப்பிலிருந்து விழிக்க மாட்டாயா?


P.Sekaran
மே 06, 2024 10:27

இப்பொழுது புரிகிறதா தீய சக்திகள் யார் என்று இதற்கெல்லாம் வக்காளத்து வாங்குபவர்கள் ஆளும் கட்சியினர் எதிர்த்து நின்றால் உயிருக்கு உத்திரவாதம் இல்லை இதிலிருந்து தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது விலங்கும்


Mani . V
மே 06, 2024 04:20

இப்ப புரியுதா எங்கள் எழவு மாடல் ஆட்சியின் சாதனை?


subramanian
மே 05, 2024 14:41

இந்த தீய சக்தி ஆட்சி கலைக்கப்பட வேண்டும் எங்கும் எதிலும் ஊழல் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் தர்மம் நின்று கொல்லும் கடவுள் இல்லை என்று கூறி அராஜகம் செய்து ஆடினாலும், செய்த பாவம் விடாது கருப்பு


Anantharaman Srinivasan
மே 05, 2024 19:09

இனி எந்த ஆட்சி வந்தாலும் நிலைமை ஒன்று தான் லஞ்சம் கொடுப்பவர்கள் ஒன்று தான் வாங்குகிற கைககள் தான் மாறும்


உண்மையை பேசும் தமிழன்
மே 05, 2024 03:09

operation.....KO....என்ற சந்தேகம் வருகிறது. இந்த சந்தேகம் அதிகமான தமிழ் நபர்களிடம் வந்திருக்கும். கொஞ்சம் யார் யார் எல்லாம் திராவிட மாடெல் லை எதிர்த்து பேசுபவர்கள் கொஞ்சம் கவனத்துடன் இருக்க வேண்டும். வரும் காலத்தில் எல்லாம் கொஞ்சம் யோசித்து பேச வேண்டும் என்று எச்சரிப்பது போல் உள்ளது. இதில் பேச்சு உரிமை, எழுத்து உரிமை, கருத்து சுதந்திரம் என்று நீதி மன்றம் சொல்லுவதை கேட்டால் சிரிப்பு வருகிறது. இன்னும் 500 நாள்கள் திராவிட அரசியல் வாதிகளை எதிர்த்து பேசாமல் இருப்பது சாதாரண மக்களுக்கு பாதுகாப்பானது. இப்படி எல்லாம் கொலை, போதை மருந்து புழக்கம் வரும் என்று கனவிலும் நினைக்கவில்லை. கொடுமை.....இது தான் திராவிட மாடல் அரசியல் என்றும் சொல்லாம்


மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ