| ADDED : மே 16, 2024 02:33 AM
திருநெல்வேலி:திருநெல்வேலி மார்க்கெட் சம்பக் கடை தெருவைச் சேர்ந்தவர் பெர்டின் ராயன், 35. திருநெல்வேலியில் மாநகராட்சி, பத்திரப்பதிவுத்துறை, உள்ளூர் திட்ட குழுமம், சுரங்கத் துறை, மின்வாரிய அலுவலங்களில் நடக்கும் முறைகேடுகள் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தகவல் பெற்று, நடவடிக்கை கோரி வழக்கு தொடர்ந்து வந்தார்.திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு பத்திரப்பதிவு அலுவலகங்களில் நடந்த முறைகேடுகள் குறித்து பத்திரப்பதிவு ஐ.ஜி.,க்கு புகார் அளித்தார். அதன்படி, லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரிக்கின்றனர்மே 4 அதிகாலை பேட்மின்டன் கிளப்பிற்கு பெர்டின் ராயன், தன் காரில் வந்த போது, வழிமறித்த நபர் சரமாரியாக அரிவாளால் வெட்டினார். காயமடைந்த அவர், திருவனந்தபுரம் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.குற்றவாளிகள் தேடப்பட்ட நிலையில், நேற்று திருநெல்வேலி முதலாவது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் திண்டுக்கல், யூஸுபியா நகரை சேர்ந்த சாகுல் ஹமீது மகன் தாஜுதீன், 25, என்ற வாலிபர் சரணடைந்தார். நேற்று சிறையில் அடைக்கப்பட்டவரை மீண்டும் கஸ்டடி எடுத்து விசாரிக்க உள்ளனர்.போலீஸ் தரப்பில் கூறியதாவது:மேலப்பாளையம் நிலம் பத்திரப்பதிவு மோசடி தொடர்பாக பெர்டின் ராயன் புகார்கள் செய்துள்ளார். சில சம்பவங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதில் ஏற்பட்ட முன்விரோதத்தில், திண்டுக்கல்லைச் சேர்ந்த ஐந்து வாலிபர்கள், கூலிப்படையாக திருநெல்வேலிக்கு ஒரு மாதத்திற்கு முன் வந்தனர். உள்ளூர் நபர்கள் துணையுடன், ஒரு மாதமாக பெர்டின் ராயனை கண்காணித்துள்ளனர்.இருப்பினும் முழுமையான தகவல் தாஜுதீனிடம் விசாரணை நடத்திய பிறகும் அவரது கூட்டாளிகளை கைது செய்த பிறகும் தான் தெரிய வரும்.இவ்வாறு கூறினர்.