உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / ரூபி மனோகரன் உட்பட 20 பேருக்கு சம்மன்?: நெல்லை மாவட்ட காங்., தலைவர் மரண விசாரணை

ரூபி மனோகரன் உட்பட 20 பேருக்கு சம்மன்?: நெல்லை மாவட்ட காங்., தலைவர் மரண விசாரணை

திருநெல்வேலி: திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங், 58. இவர், மே 4ம் தேதி காலை கரைசு துப்புதுாரில் அவரது வீட்டின் பின்புறம் தென்னந்தோப்பில் கருகி, இறந்து கிடந்தார். திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நடந்தது. இரண்டு நாட்கள் ஆகியும் பிரேத பரிசோதனை முடிவுகள் போலீசாரால் அறிவிக்கப்படவில்லை.

டி.என்.ஏ., பரிசோதனை

எனவே, கண்டெடுக்கப்பட்டது ஜெயக்குமாரின் உடல் தானா என்ற சந்தேகம் அவரது மனைவி ஜெயந்தி உள்ளிட்டோருக்கு இருந்தது. அதை ஊர்ஜிதப்படுத்துவதற்காக அவரது மூத்த மகன் கருத்தையா ஜெப்ரினிடம், மாதிரி எடுக்கப்பட்டு, டி.என்.ஏ., பரிசோதனை நடத்தப்பட்டது.இந்நிலையில், ஜெயக்குமார் எழுதிய புகார் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த, காங்கிரஸ் மாநில முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு, நாங்குநேரி எம்.எல்.ஏ., ரூபி மனோகரன், பள்ளி தாளாளர் ஜெய்கர், ஆனந்தராஜா, குத்தாலிங்கம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்காக அவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன், ஜெயக்குமார் காசோலையை பயன்படுத்தி, 10 லட்சம் ரூபாய் கடன் வாங்கி இருந்தது கடிதம் வாயிலாக தெரிந்தது. நேற்று காலை அவரது வீட்டிலும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.நிதி நெருக்கடியில் தான், கடைசி நேரத்தில் தனக்கு பணம் தர வேண்டிய நபர்களின் பட்டியலை ஜெயக்குமார் எழுதி வைத்துள்ளார்; அவரின் இரண்டு கடிதங்களில், அவர் தற்கொலை செய்யும் எண்ணத்தில் இருந்தது தெரியவந்துள்ளது.

தீக்குளித்து தற்கொலை

எனவே, அவர் தீக்குளித்து தற்கொலை செய்திருக்கலாம் என்ற முடிவுக்கு போலீசார் வந்தனர். ஆனால், அவரது உடல் பிரேத பரிசோதனையின் போது, வாயில் திணிக்கப்பட்டிருந்த பேப்பர்கள் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. எனவே, அது குறித்தும் சந்தேகம் உள்ளது.'ஜெயக்குமார் தற்கொலை செய்திருந்தால், அவரின் உடல் பிரேத பரிசோதனை அறிக்கையை போலீசார் அறிவித்திருப்பர். கொலை அல்லது சந்தேக மரணம் என்பதால், துப்பு துலக்குவதில் உள்ள சிக்கல்களால் தான் இதுவரை அந்த அறிக்கையில் உள்ள தகவல்களை வெளிப்படையாக அறிவிக்க போலீசார் தயங்குகின்றனர்' என்ற பேச்சு எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை