உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி மாணவரை தாக்கி ரூ. 21,000 பறித்த 4 கிரிண்டர் ஆப் வாலிபர்கள் கைது

திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி மாணவரை தாக்கி ரூ. 21,000 பறித்த 4 கிரிண்டர் ஆப் வாலிபர்கள் கைது

திருநெல்வேலி:திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி எம்.பி.பி.எஸ்., மாணவரை தனியாக அழைத்து தாக்கி ரூ 21,000 பறித்து சென்ற கல்லூரி மாணவர் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். சென்னை பூந்தமல்லியைச் சேர்ந்த அசோக்குமார் மகன் ஹரிஹரன் 24. திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியில் 5ம் ஆண்டு எம்.பி.பி.எஸ்., பயில்கிறார். இவர் ஓரினச்சேர்க்கையாளர்கள் பயன்படுத்தும் கிரிண்டர் ஆப் மூலம் திருநெல்வேலியைச் சேர்ந்த சிலரிடம் நட்பாக பழகினார். அதில் பழகியவர்கள் அழைத்ததால் திருநெல்வேலி அரியகுளம் சென்றார். அங்கு நான்கு பேர் ஹரிஹரனுடன் பேசிய நிலையில் திடீரென தாக்கினர். அவரது அலைபேசி ஜிபே மூலம் ரூ 21,000 அனுப்பும்படி கூறி பெற்றனர். பின் அவரை தாக்கி அனுப்பினர். ஹரிஹரன் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது புகாரின்படி போலீசார் ஸ்ரீவைகுண்டம் அருகே வல்லக்குளம் சந்தன பாண்டி மகன் பாலச்சந்தரை 21, கைது செய்தனர். அவர் மண் அள்ளும் இயந்திர ஆப்பரேட்டராக உள்ளார். இவருடன் மேலும் 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களில் இருவர் அரசு பள்ளியில் பிளஸ் டூ பயில்கின்றனர். ஒருவர் கல்லூரியில் பி.எஸ்.சி., பயில்கிறார். கிரிண்டர் எனப்படும் ஆப் பயன்படுத்தி பணம், அலைபேசியை பறிப்பது திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் நான்கு ஆண்டுகளாக அதிகம் நடக்கிறது. 20 வழக்குகளில் 100 பேர் கைது தென்காசி மாவட்டம் சுரண்டையில் ஒரு வாலிபரை கிரிண்டர் ஆப் கும்பல் கடத்திச் சென்று தாக்கி பணம் பறித்த சம்பவத்தில் 10 பேர் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி கிருஷ்ணாபுரத்தில் ஸ்ரீதரை கடத்தி சென்று பணம் பறித்த ஸ்ரீவைகுண்டம் கருப்பசாமி உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டனர். கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரத்தைச் சேர்ந்த கத்தோலிக்க பாதிரியார் அருள்சீலனை கடந்த மாதம் காரில் கடத்திச் சென்று கங்கைகொண்டான் அருகே தாக்கி பணம், அலைபேசியை பறித்து சென்றனர். இதில் ஈடுபட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர். கடந்த மூன்று ஆண்டுகளில் 20க்கும் மேற்பட்ட சம்பவங்களில் 100 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். கிரிண்டர் ஆப் பயன்படுத்தி இத்தகைய தாக்குதல் பணம் பறிப்பு வழிப்பறி சம்பவங்களில் ஈடுபடும் வாலிபர்களை கண்டறிந்து முன்கூட்டியே கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை