நில உரிமையாளர் இறந்ததாக கூறி போலி பத்திரப்பதிவு: கைது 5
திருநெல்வேலி:திருநெல்வேலியில் ரூ.ஒரு கோடி மதிப்பிலான நிலத்தை உரிமையாளர் இறந்ததாக கூறி போலியாக பத்திரவு பதிவு மேற்கொண்ட 2 பெண்கள் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலியைச் சேர்ந்தவர் சுந்தர் சிங் 75. இவரது மகன் ஜிக்சன் ஐசக் 44, மதுரை கூடல் நகரில் வசிக்கிறார். சுந்தர்சிங் 1990ல் வண்ணார்பேட்டை தெற்கு பைபாஸ் ரோடு அருகே 6 சென்ட் நிலம் வாங்கினார். அதனை 2023ல் மகன் பெயருக்கு செட்டில்மெண்ட் ஆவணம் செய்து கொடுத்தார். அவருக்கு ஜிக்சன் ஒரே மகன் தான். வேறு வாரிசுகள் கிடையாது. அந்த நிலத்திற்கு தற்போது பட்டா வாங்க ஜிக்சன் ஐசக் முயன்றார். அப்போது நில உரிமையாளர் சுந்தர்சிங் இறந்து விட்டதாகவும் அவரது பெண் வாரிசுகள் சுந்தரி, பவித்ரா ஆகியோர் நிலத்தை அப்துல் ஹுசேன் என்பவருக்கு விற்பனை செய்து விட்டதாகவும் மேலப்பாளையம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் மோசடியாக பத்திரப்பதிவு செய்யப்பட்டிருந்தது. இதுகுறித்து போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹதிமணியிடம் ஜிக்சன் ஐசக் புகார் செய்தார். மேலப்பாளையம் போலீசார் விசாரித்தனர். மேலப்பாளையத்தைச் சேர்ந்த அப்துல் ஹுசைன், இவ்வாறு உயிருடன் இருக்கும் நபர்கள் இறந்ததாக போலி ஆதார் அட்டை, இறப்புச்சான்று தயார் செய்துள்ளார். சுந்தர் சிங்கிற்கு ஒரே ஒரு மகன் ஜிக்சன் ஐசக் மட்டும் உள்ளார். ஆனால் சுந்தரி, பவித்ரா என இரு மகள்கள் இருப்பது போல போலி ஆவணங்கள் தயார் செய்து இந்த பத்திரப்பதிவு செய்தது கண்டுபிடிக்கப் பட்டது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்து அப்துல் உசேன் 56, மீரான் மைதீன் 50, சுடலை 40, சுடலை உறவினர்கள் காவல்கிணறு பவித்ரா 30, சுந்தரி 40, ஆகியோரை போலீசார் கைது செய்தனர். தற்போது நிலத்தின் மதிப்பு ரூ.ஒரு கோடி. இந்த போலி பத்திரப்பதிவிற்கு வருவாய்த்துறை அதிகாரிகள், மேலப்பாளையம் பத்திரப்பதிவுத்துறை அதிகாரிகள் உடந்தையாக செயல்பட்டார்களா என்பது குறித்தும் போலீசார் விசாரிக்கின்றனர்.