| ADDED : ஏப் 13, 2025 11:43 PM
திருநெல்வேலி; கடையத்தில், 30,000 ரூபாய் லஞ்சம் வாங்கி கைதான இன்ஸ்பெக்டர் உயிருக்கு திருநங்கையரால் ஆபத்து ஏற்படலாம் எனக்கருதி, அவரை தக்கலை சிறைக்கு அதிகாரிகள் மாற்றினர்.திருநெல்வேலி மாவட்டம், பணகுடி செல்வகுமார், கடையம் போலீஸ் ஸ்டேஷனில், ஆள் கடத்தல் வழக்கில் கைதானவர். நிபந்தனை ஜாமினில் தினமும் கையெழுத்திட்டு வந்தார்.அவரிடம் கடையம் இன்ஸ்பெக்டராக இருந்த மேரி ஜெமிதா, 47, வழக்கை சீக்கிரம் முடித்து தரவும், கடத்தலுக்கு பயன்படுத்திய காரை விடுவிக்கவும், 30,000 ரூபாய் லஞ்சம் கேட்டார். அவரிடம் செல்வகுமார் லஞ்சம் கொடுத்த போது, தென்காசி லஞ்ச ஒழிப்பு போலீசார், நேற்று முன்தினம் இன்ஸ்பெக்டரை கைது செய்தனர். அவரை திருநெல்வேலி கொக்கிரகுளம் பெண்கள் கிளை சிறைக்கு கொண்டு செல்ல போலீசார் திட்டமிட்டனர்.ஆனால், மார்ச் 6ல் கடையம் அருகே பரும்புநகரில் கணேசன் என்ற ஷைலு திருநங்கையாக மாற ஆணுறுப்பை அறுத்துக் கொண்ட போது, அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு இறந்தார். அவருக்கு உடனிருந்து அறுவை சிகிச்சை செய்த திருநங்கையர் மகாலட்சுமி, மதுமிதா ஆகியோர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, திருநெல்வேலி கொக்கிரகுளம் பெண்கள் கிளை சிறையில் உள்ளனர்.அவர்களை இன்ஸ்பெக்டர் மேரி ஜெமிதா கைது செய்தார். இதனால் கொக்கிரகுளம் பெண்கள் சிறையில் அவருக்கு பாதுகாப்பில்லை என்பதால், கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை கிளை சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.