தடை செய்யப்பட்ட களைக்கொல்லி பறிமுதல்
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் உரம், பூச்சிக்கொல்லி மருந்து விற்பனை நிலையங்களில் வேளாண்மைத் துறை அதிகாரிகள் நடத்திய திடீர் ஆய்வில், மத்திய அரசால் தடை செய்யப்பட்ட 915 லிட்டர் ‘பாராகுவாட் டைகுளோரைடு’ களைக்கொல்லி மருந்து பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து திருநெல்வேலி வேளாண்மை இணை இயக்குநர் பூவண்ணன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தடை செய்யப்பட்ட மருந்துகளை இருப்பு வைத்து விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், விற்பனையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். உரிமமும் ரத்து செய்யப்படும்,” என எச்சரித்துள்ளார். ‘பாராகுவாட் டைகுளோரைடு’ கலந்த நான்கு வகையான களைக்கொல்லி மருந்துகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், விவசாயிகள் அவற்றை பயன்படுத்தக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.