பி.எஸ்.எப்., வீரரின் துப்பாக்கி தோட்டாக்களுடன் திருட்டு
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் அருகே சமூகரெங்கபுரத்தை சேர்ந்த நம்பி மகன் அழகுமுத்து, 42. பஞ்சாப் மாநிலத்தில், எல்லை பாதுகாப்பு படை எனும் பி.எஸ்.எப்., படையில் எஸ்.ஐ.,யாக உள்ளார். இரண்டு மகள்கள் உள்ளனர். மனைவி கருத்து வேறுபாட்டால் பிரிந்துள்ளார். அழகுமுத்து, அக்., 19ல் சமூகரெங்கபுரத்துக்கு வந்திருந்தார். அவர் தன் சொந்த பாதுகாப்பிற்காக வாங்கிய, உரிமம் பெற்ற பிஸ்டல் துப்பாக்கி மற்றும் 25 தோட்டாக்களை ஒரு பெட்டியில் வைத்து பெற்றோர் வீட்டில் வைத்திருந்தார். நவம்பரில் பணிக்கு பஞ்சாப் சென்று விட்டார். அவரது பெற்றோர் நேற்று முன்தினம் வெளியூர் சென்றிருந்தபோது ஒரு கும்பல் அவரது வீட்டின் பூட்டை உடைத்து, பீரோவில் இருந்த துப்பாக்கி, தோட்டாக்களை திருடி சென்றது.அதே கும்பல், அதே பகுதியில் 85 வயது மூதாட்டி ஒருவரின் நகையை பறித்து சென்றது. ராதாபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.