திருநெல்வேலி:திருநெல்வேலியில், தாமிரபரணி ஆற்றுக்குள் இரவில் சென்று, ஓரினச்சேர்க்கை கும்பலிடம் சிக்கிய கிறிஸ்துவ பாதிரியாருக்கு, அடி, உதை விழுந்தது.கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் கொட்டாரம் பங்கு, கத்தோலிக்க பாதிரியாராக இருப்பவர் அருள்சீலன், 50. இவர், நேற்று முன்தினம் மாலை, உவரி தேவாலயம், பொத்த காலன் விளை தேவாலயம் ஆகியவற்றுக்கு, தன், 'ஹூண்டாய் வெனியு' காரில் சென்றார். இரவு, 7:30 மணிக்கு, வண்ணார்பேட்டை, கொக்கிரகுளம் தாமிரபரணி ஆற்றுக்கு சென்று உள்ளார்.அங்கு, ஓரின சேர்க்கையாளர்களுக்கான 'கிரைண்டர்' ஆப்பை பயன்படுத்தும், 25 வயது மதிக்கத்தக்க ஆறு வாலிபர்கள் இருந்தனர். அவர்கள் பாதிரியாரை மிரட்டி, அவரிடம் இருந்து 1 லட்சம் ரூபாய் பணம், மொபைல் போன், ஏ.டி.எம். கார்டுகள் உள்ளிட்டவற்றை பறித்தனர். பின், அவரது காரிலேயே அவரை கங்கைகொண்டான் அழைத்துச் சென்றனர். வழியில் அவரது ஏ.டி.எம்., கார்டை பயன்படுத்தி, ஆயிரக்கணக்கில் ஷாப்பிங் செய்தனர்.பின், ஹோட்டலில் பார்சல் சாப்பாடு வாங்கி, சீவலப்பேரி செல்லும் சாலையில், ஆலடிப்பட்டி டாஸ்மாக் அருகே காரை நிறுத்தி, காட்டு பகுதியில் அமர்ந்து சாப்பிட்டனர். நள்ளிரவு, 3:00 மணியளவில் அப்பகுதிக்கு ரோந்து வந்த கங்கைகொண்டான் போலீசாரை பார்த்ததும், அவர்கள் ஓட்டம் பிடித்தனர். பலத்த காயங்களுடன் காரில் முனங்கியபடி இருந்த பாதிரியாரை மீட்ட போலீசார், திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். ஜங்ஷன் குற்றப்பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.
'கிரைண்டர்' கும்பல் அட்டூழியம்
சர்வதேச அளவில் 'கிரைண்டர் ஆப்' மூலமாக ஓரின சேர்க்கையாளர்கள் ஒருங்கிணைந்து பழகி வருகின்றனர். திருநெல்வேலியில், தாமிரபரணி ஆற்றின் கரை உட்பட, பல இடங்களில் இந்த ஆப் கும்பலை சேர்ந்தவர்கள் அலைகின்றனர். தினமும் இத்தகைய கும்பல்களால் வழிப்பறி தாக்குதல்கள் நடக்கின்றன. பத்தில் ஒரு சம்பவம் மட்டுமே போலீஸ் கவனத்திற்கு வருகிறது. இத்தகைய ஆப்பிற்கு தடை விதிக்க வேண்டும் என, சென்னை போலீஸ் கமிஷனர் அருண், ஏற்கனவே கோரிக்கை விடுத்திருந்தார். தற்போது கிறிஸ்துவ பாதிரியார் தாக்கப்பட்டுள்ளார். சில மாதங்களுக்கு முன், நாங்குநேரியை சேர்ந்த மாணவன் சின்னதுரையும், தாமிரபரணி ஆற்றங்கரையில் இதே கும்பலால் தாக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.