கவின் கொலையில் கைதான தந்தை, மகன் கோர்ட்டில் ஆஜர்
திருநெல்வேலி:தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்த ஐ.டி. ஊழியர் கவின் 27, கடந்த ஜூலை 27ம் தேதி திருநெல்வேலி கே.டி.சி., நகரில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து கொலை செய்த காதலியின் தம்பி சுர்ஜித் கைது செய்யப்பட்டார். கொலைக்கு தூண்டுதலாக இருக்கலாம் என சுர்ஜித்தின் தந்தை போலீஸ் எஸ்.ஐ., சரவணன் மற்றும் தாய் எஸ்.ஐ.,கிருஷ்ணகுமாரி ஆகியோர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. சரவணன் கைது செய்யப்பட்டார். இருவரும் திருநெல்வேலி சிறையில் உள்ளனர்.வழக்கை தற்போது சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரித்து வருகின்றனர்.சுர்ஜித், சரவணனை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சி.பி.சி.ஐ.டி., போலீஸ் தரப்பில் தீண்டாமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனு செய்திருந்தனர். சிறையில் இருந்து சரவணன், சுர்ஜித் ஆகியோர் நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டனர். இருவரும் தங்கள் முகத்தை துணியால் மறைத்துக் கொண்டு வந்தனர். அரசு தரப்பில் வழக்கறிஞர் கந்தசாமியும், சுர்ஜித் தரப்பில் சிவசூரியநாராயணனும் ஆஜராகினர். ஆக.,11ல் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் படியும் அப்போது சி.பி.சி.ஐ.டி., கேட்கும் கஸ்டடி குறித்து விபரம் தெரிவிக்கப்படும் எனவும் நீதிபதி அறிவித்தார். தந்தை, மகன் இருவரும் மீண்டும் மத்திய சிறைக்கு போலீஸ் பாதுகாப்புடன் மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.