கஞ்சா கடத்தலில் மகன் கைதால் தந்தை விஷமருந்தி தற்கொலை
திருநெல்வேலி: திருநெல்வேலியில் 200 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில் மகன் கைதானதால் தந்தை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். ஆந்திராவில் இருந்து திருநெல்வேலிக்கு கார்களில் கஞ்சா கடத்தப்படுவதாக தூத்துக்குடி போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. டிச., 6 இரவு மதுரை -- நாகர்கோவில் நான்கு வழிச்சாலையில் திருநெல்வேலி பொட்டல் விலக்கு அருகே போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக சென்ற ஒரு கார் மற்றும் சரக்கு வாகனத்தை போலீசார் வழிமறித்தனர். கார் நிற்காமல் சென்றது. இதுகுறித்து நகர் போலீசுக்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர். மேலும் சரக்கு வாகனத்தை சோதனையிட்டதில் 60 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்தன. பின் காரில் சென்ற தாழையூத்து நிதீஷ்குமார் 26, கைது செய்யப்பட்டார். அவரது தகவலின்படி தாழையூத்து சுரேஷ்குமாரை 25, போலீசார் கைது செய்தனர். தப்பிய காரை போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹதிமணி உத்தரவின்படி துணை கமிஷனர் பிரசன்னகுமார் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் கரையிருப்பு பகுதியில் கண்டுபிடித்தனர். அதில் இருந்த 140 கிலோ கஞ்சா பொட்டலங்களையும் பறிமுதல் செய்தனர். இந்நிலையில் சுரேஷ்குமாரின் தந்தை கலைஞர் பாண்டியன் 57, போலீசார் தம்மையும் விசாரிக்கலாம் என்பதால் மனமுடைந்து விஷம் குடித்தார். அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவர் நேற்று இறந்தார். தாழையூத்து போலீசார் விசாரிக்கின்றனர்.