மின்சாரம் தாக்கி தந்தை, மகன் பலி பந்தல் அமைத்தபோது பரிதாபம்
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகே பந்தல் அமைக்கும் பணியின் போது மின்சாரம் தாக்கி தந்தை, மகன் இறந்தனர். வள்ளியூர் சமத்துவபுரத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் 54. நேற்று ராதாபுரம் அருகே சமூகரெங்கபுரத்தில் புதுமனை புகுவிழாவிற்கான பந்தல் அமைக்கும் பணியில், தனது மகன் ஸ்டீபன் 23, மற்றும் ஈனன்குடியிருப்பைச் சேர்ந்த சுதாகர் ஆகியோருடன் ஈடுபட்டார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்கம்பி அறுந்து விழுந்ததால் மின்சாரம் தாக்கி சுரேஷ், மகன் ஸ்டீபன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சுதாகர் அதிர்ச்சியில் சுவரில் மோதி தலையில் காயமடைந்தார். அவர் ராதாபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ராதாபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.