சித்த மருத்துவ பல்கலை மசோதா திருத்தங்களுடன் நிறைவேறும் அமைச்சர் சுப்பிரமணியன் உறுதி
திருநெல்வேலி:''சென்னையில் சித்த மருத்துவ பல்கலை அமைப்பதற்கான சட்ட மசோதாவில் கவர்னர் சுட்டிக்காட்டியுள்ள நான்கு திருத்தங்களை சரிசெய்து, வரும் சட்டசபை கூட்டத்திலேயே நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார். திருநெல்வேலியில் அரசு சித்த மருத்துவ கல்லுாரியின் 60-வது ஆண்டு நிறைவு வைரவிழா நேற்று நடந்தது. சித்த மருத்துவர் டாக்டர் சிவராமன் வரவேற்றார். விழாவில் வைரவிழா மலர் வெளியிடப்பட்டது. பல்வேறு சித்த மருத்துவர்கள் எழுதிய நுால்களும் வெளியிடப்பட்டன. அமைச்சர் சுப்பிரமணியன் கூறியதாவது: உடல் உறுப்பு தானம் செய்பவர்களின் உடலுக்கு அரசு மரியாதை செய்யப்படும் என, முதல்வர் அறிவித்த பின், 494- பேர் உறுப்பு தானம் செய்துள்ளனர். இந்த திட்டம் இந்திய அளவில் முதலிடத்தில் உள்ளது. சித்த மருத்துவ பல்கலைக்கழகம் வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கையை, இந்த அரசு பொறுப்பேற்றவுடன் அறிவித்து, சட்ட முன்வடிவை நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பினோம். அந்த மசோதா நான்கு, ஐந்து முறை சில திருத்தங்களுக்காக திருப்பி அனுப்பப்பட்டு, மீண்டும் திருத்தங்கள் செய்து அனுப்பப்பட்டது. ஆக., 21ல் கவர்னர் மீண்டும் நான்கு திருத்தங்களுடன் மசோதாவை திருப்பி அனுப்பி உள்ளார். அந்த கடிதம் தற்போது சட்டத்துறையின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த வாரத்திற்குள் திருத்தங்கள் சரி செய்யப்பட்டு, எப்போது சட்டசபை கூடினாலும் இந்த சட்ட முன்வடிவு நிறைவேற்றப்பட்டு, செயல்படுத்தப்படும். கிராம சுகாதார செவிலியர்கள், 2,240 பணியிடங்களை நிரப்ப தேர்வு நடத்தி முடிக்கப்பட்டுவிட்டது. இது தொடர்பாக, 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தன. இன்னும் இரண்டு, மூன்று நாட்களில் தீர்ப்பு வந்துவிடும். தீர்ப்பு வந்ததும், 2,000-க்கும் மேற்பட்ட கிராமப்புற சுகாதார செவிலியர்களுக்கு பணி ஆணைகள் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். விழாவில், வைரவிழா மலர் வெளியிடப்பட்டது. பல்வேறு சித்த மருத்துவர்கள் எழுதிய நுால்களும் வெளியிடப்பட்டன. விழாவில், அமைச்சர் நேரு, நெல்லை கலெக்டர் சுகுமார், மக்கள் நல்வாழ்வுத்துறை செயலர் டாக்டர் செந்தில்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.