தி.மு.க., கூட்டணியில் புகைச்சல் சொல்கிறார் நயினார் நாகேந்திரன்
திருநெல்வேலி:''தி.மு.க., கூட்டணியில் புகைச்சல் உள்ளதாக தெரிகிறது ''என தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.திருநெல்வேலியில் சர்வதேச யோகா தினத்தையொட்டி நடந்த யோகா நிகழ்வில் பங்கேற்ற அவர் கூறியதாவது:மதுரை முருக பக்தர்கள் மாநாட்டிற்கு 'இ பாஸ் 'என அறிவித்த, தமிழக அரசிடம் எங்களுக்கு நீதி கிடைக்கவில்லை. ஆனால் நீதிமன்றம் எங்களுக்கு நீதி அளித்துள்ளது. முருகபக்தர்கள் மாநாடு சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.5 லட்சத்திற்கும் மேல் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கிறோம். மத்திய அரசு யாரையும் வஞ்சிக்கவில்லை. மத்திய அரசு அறிவிக்கும் திட்டங்களை தான் தமிழக அரசு ஸ்டிக்கர் ஒட்டி செயல்படுத்துகிறது.தி.மு.க ., அரசு தமிழை வைத்து பிழைப்பு நடத்துகிறது. அதைத்தவிர வேறு எதுவும் தெரியாது. சுகாதாரத் துறையில் மத்திய அரசு தரும் நிதியில் இன்னும் 30 பணியிடங்களை நிரந்தரப்படுத்தாமல் உள்ளனர். பிரதமர் மோடி, தமிழை மதிக்கிறார். சர்வதேச அளவில் தமிழை எடுத்துச்செல்கிறார். தி.மு.க. கூட்டணியில் புகைச்சல் உள்ளது. அதில் எம்.எல்.ஏ., இடங்கள் குறித்து கவலை இல்லை. கூட்டணியில் தொடர்வோம் என வி.சி.க., தலைவர் திருமாவளவன் கூறுகிறார். அப்படியென்றால் அங்கு ஏதோ பிரச்னை இருக்கிறது என்று தான் அர்த்தம். தற்போது 5 இடங்கள் பெற்றுள்ளனர். இனி இரண்டு 2 மட்டும் வாங்கிக் கொண்டு கூட்டணியில் தொடர்வார்களா. பா.ஜ., கூட்டணியில் மேலும் புதிய கட்சிகள் இணைய வாய்ப்புள்ளது. தி.மு.க., அரசு கடந்த நான்கு ஆண்டுகளில் செய்த சாதனைகளை குறித்து பேசி ஓட்டு கேட்க வேண்டும். பா.ஜ., கூட்டணி குறித்து பேச தேவையில்லை. தமிழகத்திற்கு பிரதமர் மோடி வரும் அளவுக்கு வேலைகள் இல்லை .உள்துறை அமைச்சர் அமித்ஷா அதை பார்த்துக் கொள்வார் என்றார்.