மேலும் செய்திகள்
ஓய்வு பெற்ற அதிகாரியை மிரட்டி ரூ.53 லட்சம் மோசடி
29-Sep-2025
நெல்லையில் ஹெலிகாப்டர் சுற்றுலா
25-Sep-2025
புளியங்குடி : தண்ணீருக்காக ஏங்கி வாடும் எலுமிச்சை மரங்களை கண்டு புளியங்குடி விவசாயிகள் கண்ணீர் சிந்துகின்றனர்.நெல்லை மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதியில் மாவட்டத்தின் வடக்கு எல்லை பகுதியில் அமைந்திருக்கும் நகரம் புளியங்குடி. நகராட்சி அந்தஸ்து பெற்ற இந்த நகரத்தில் சுமார் 80 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். புளியங்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் வசிக்கும் மக்களில் பெரும்பான்மையானோர் விவசாயத்தையே தங்கள் ஜீவாதார தொழிலாக செய்து வருகின்றனர்.மேலும் விவசாயத்துடன் இணைந்த தொழிலான கால்நடைகளை வளர்த்தல் மூலம் பால் உற்பத்தியும் செய்து வருகின்றனர். மேலும் இப்பகுதியில் கரும்பு, சோளம், நெல், மா, நெல்லி, தென்னை, எலுமிச்சை ஆகியன சாகுபடி செய்கின்றனர். இவற்றுள் பணப்பயிராக கருதப்படும் எலுமிச்சை இப்பகுதியில் அதிகபடியாக பல ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.மேலும் இங்கு விளைகின்ற எலுமிச்சை பழங்களில் சிட்ரிக் அமிலத்தின் அளவு அதிகமாக இருக்கும் என்பதால் தேவையும் அதிகமாக இருக்கும். இங்கு விளைகின்ற எலுமிச்சை பழங்கள் மூன்று தரங்களாக பிரிக்கப்பட்டு இங்கிருக்கும் சுமார் 29 ஏலக்கடைகள் மூலம் எண்ணிக்கையின் அடிப்படையில் ஏலம் மூலம் விற்பனையாகின்றது. நாள் ஒன்றுக்கு சுமார் 150 டன் எலுமிச்சை பழங்கள் இங்கு விற்பனையாகின்றது.இவைகள் அண்டை மாநிலங்களுக்கு மட்டுமின்றி வளைகுடா நாடுகளுக்கும் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. மேலும் தமிழகத்திலேயே பிரத்யோகமான விற்பனை மையமும், எண்ணிக்கையின் அடிப்படையில் விலை நிர்ணயிக்கப்படுவதும் புளியங்குடியில் மட்டும் தான். இதனால் புளியங்குடிக்கு 'லெமன் சிட்டி' என்ற புனைப்பெயரும் உண்டு. ஆனால் புளியங்குடி பகுதியில் கடந்த சில ஆண்டாக போதிய பருவமழை இல்லாததால் ஆறுகள், கண்மாய்கள், குளங்கள் ஆகியவற்றில் தண்ணீர் இருப்பு அளவு வெகுவாக குறைந்து வறட்சியின் சின்னங்களாக பிரதிபலிக்கின்றன.பொதுவாக கோடை காலங்களில் மரங்களுக்கு அதிகமான தண்ணீர் பாய்ச்சினால் மட்டுமே வெயிலின் தாக்கத்திலிருந்து மரத்தையும், காய் மற்றும் பூ உதிர்தலையும் தடுக்க முடியும். ஆனால் தற்போது ஏற்பட்டிருக்கும் கடும் வறட்சியால் தண்ணீர் இன்றி மரங்கள் வாடுவதை கண்டு விவசாயிகள் கண்ணீர் சிந்துகின்றனர். மேலும் தற்போது மரங்களுக்கு தண்ணீர் பாய்ச்சிய சில மணிநேரங்களில் காற்றின் வேகத்தால் நிலத்தில் இருக்கும் ஈரப்பதம் உறிஞ்சப்படுகின்றது.இதனால் சில மணி நேரங்களிலேயே தண்ணீர் பாய்ச்சிய சுவடுகள் மறைந்து விடுகின்றன. கோடை காலத்தில் தான் எலுமிச்சை பழங்களுக்கு தேவை அதிகமாக இருக்கும். தேவை அதிகமாக இருக்கும்போது தான் விலையும் அதிகமாக இருக்கும். விலை அதிகமாக இருக்கும் கோடை காலங்களில் தண்ணீர் பற்றாக்குறையால் பழங்கள் திரட்சியாக விளையும் தன்மை குறைந்து விடுகின்றது. அதுபோல குளிர்காலங்களில் தேவை குறைவாக இருக்கும்போது விலை வீழ்ச்சி ஏற்படுகின்றது. இப்படி இயற்கையால் பந்தாடப்படுகின்றனர் விவசாயிகள்.இந்நிலையில் கடந்த சில மாதத்திற்கு முன் ஆயிரம் எண்ணிக்கை கொண்ட எலுமிச்சை பழங்கள் அதிகபட்சமாக சுமார் நான்காயிரம் ரூபாய்க்கு விற்று தீர்ந்தது. விலை விவசாயிகளுக்கு ஆறுதலாக இருந்தாலும் கிணறுகளில் தண்ணீரோ கவலையடைச் செய்கின்றது. இந்த சூழ்நிலையை சமாளிக்கவும், தாங்கள் சாகுபடி செய்துள்ள எலுமிச்சை மரங்களை காப்பாற்றவும் விவசாயிகள் குழுக்களாக சேர்ந்து மலையடிவாரப் பகுதியில் ஆற்றுப்படுகைகளில் கிணறுகளை தோண்டி அதில் மின்மோட்டார்களை பொருத்தி பைப் லைன்கள் அமைத்து அங்கிருந்து தண்ணீர் கொண்டு வந்து மரங்களுக்கு பாய்ச்சி வருகின்றனர்.
ஆனால் பலர் இதுபோன்று ஆற்றுப்படுகைகளில் கிணறுகள் வெட்டி தண்ணீர் கொண்டு வந்த நிலையில் அந்த கிணறுகளிலும் தண்ணீரின் அளவு மிகவும் குறைந்துவிட்டது. இதற்கு மாறாக விவசாயிகள் சிலர் விலை கொடுத்து டேங்கர் டிராக்டர்களில் தண்ணீரை வாங்கி எலுமிச்சை மரங்களுக்கு பாய்ச்சி மரங்களை காப்பாற்றுகின்றனர். ஆனால் ஏழை, எளிய விவசாயிகள் வேறு வழி தெரியாமல் விளை நிலங்களை ரியல் எஸ்டேட் அதிபர்களிடம் சொற்ப விலைக்கு விற்று விடுகின்றனர்.இப்படிப்பட்ட சூழ்நிலையில் தண்ணீரின்றி வாடும் எலுமிச்சை மரங்களில் நுனி கருகுதல், தண்டு துளைப்பான், காஞ்சர நோய் உள்ளிட்ட தொற்று நோய்கள் தாக்கி மரத்தை சேதப்படுத்துகின்றன. இது விவசாயிகளை மேலும் கவலையடை செய்கின்றது. இவ்வாறு விவசாயிகள் மீது விலை வீழ்ச்சி, தண்ணீர் பற்றாக்குறை, தொற்றுநோய் தாக்குதல் என பல தரப்பிலிருந்தும் தாக்குதல் நடத்தப்படுகின்றது.ஆனால் கடந்த சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை விவசாயத்திற்கு கிணறுகள் வெட்டவும், ஆழப்படுத்தவும் நிலவள வங்கிகள் மூலம் கடனுதவி வழங்கப்பட்டன. ஆனால் அந்த திட்டமும் காலப்போக்கில் நிறுத்தப்பட்டது. இப்படிப்பட்ட சவாலான சூழ்நிலையை எவ்வாறு சமாளிப்பது என வழி தெரியாமல் மதில்மேல் பூனையாக விவசாயிகள் பரிதவித்து வருகின்றனர்.இந்த அவலத்தை போக்கவும், எலுமிச்சைக்கு ஆண்டு முழுவதிலும் சீரான விலை கிடைக்கவும், விலை வீழ்ச்சி ஏற்படும் காலங்களில் எலுமிச்சை பழங்களை குளிர்சாதன கிடங்கில் பாதுகாத்து வைத்து உரிய விலை கிடைக்கும் நேரங்களில் அதனை விற்பனை செய்திட குளிர்சாதன கிடங்கு ஒன்று ஏற்படுத்தித்தர வேண்டும் என விவசாயிகள் தரப்பிலிருந்து அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.இதுகுறித்து வாசு.,எம்.எல்.ஏ.,துரையப்பா தமிழக முதல்வரிடம் கோரிக்கை விடுத்தார். இதனை ஏற்றுக் கொண்ட முதல்வர் சுமார் 11 கோடியில் நெல்லை மாவட்டத்தில் குளிர்சாதன கிடங்கு அமைக்கப்படும் என்றார். இப்பகுதி விவசாயிகளின் பிரச்னைகளை முதல்வரிடம் கூறி குளிர்பதன கிடங்கை புளியங்குடியில் ஏற்படுத்தித்தர வேண்டும் என எம்.எல்.ஏ.,துரையப்பா முதல்வரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
விவசாயிகளின் எதிர்பார்ப்பு :விவசாயிகள் தங்கள் ஜீவாதார தொழிலையும், தங்களையும் பாதுகாக்க தமிழக அரசு வங்கிகள் மூலம் வட்டியில்லா நீண்டகால கடனுதவி தர வேண்டும். மேலும் வேளாண்மை பொறியியல் துறை மூலம் நிலத்தடி நீர் பற்றி கண்டறிந்து ஆழ்துளை கிணறுகள் அமைத்துதர வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். இப்பிரச்னைகளுக்கெல்லாம் தீர்வு காணும் நாளை இப்பகுதி விவசாயிகள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.
29-Sep-2025
25-Sep-2025