உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / ஆமை வேகத்தில் தென்காசி-நெல்லை அகல ரயில்பாதை பணி : துரிதப்படுத்த மக்கள் வலியுறுத்தல்

ஆமை வேகத்தில் தென்காசி-நெல்லை அகல ரயில்பாதை பணி : துரிதப்படுத்த மக்கள் வலியுறுத்தல்

தென்காசி : 'தென்காசி - நெல்லை அகல ரயில்பாதை பணி ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதை துரிதப்படுத்த வேண்டும்' என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மத்திய அரசு தென்காசி - நெல்லை மீட்டர்கேஜ் பாதையை அகல ரயில் பாதையாக மாற்ற அனுமதியளித்துள்ளது. ரயில்வே அதிகாரிகள் தென்காசி - நெல்லை இடையே அகல ரயில் பாதையாக மாற்ற ரூ.150 திட்ட மதிப்பீடு செய்து மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தனர். இத்திட்ட மதிப்பீட்டின் பேரில் மத்திய அரசு அகல ரயில்பாதை அமைக்கும் திட்டத்திற்கு முதற்கட்டமாக ரூ.30 கோடியும், ரயில்வே பட்ஜெட்டில் இரண்டாவது கட்டமாக ரூ.60 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்தது.அகல ரயில்பாதை அமைப்பதற்காக மீட்டர்கேஜ் பாதையில் இயக்கப்பட்ட தென்காசி - நெல்லை ரயில் கடந்த 2009 ஜனவரி 1ம் தேதியிலிருந்து நிறுத்தப்பட்டது. இதனையடுத்து அகல ரயில்பாதை அமைக்கும் பணி துவங்கியது. அகல ரயில்பாதை திட்டத்திலிருந்து நெல்லை வரை 160 சிறிய பாலங்கள், 14 பெரிய பாலங்கள் அமைக்கும் பணி 90 சதவீதம் நிறைவு பெற்றுவிட்டது.

ரயில் கிராஸிங் வசதியுடன் கூடிய ஸ்டேஷன்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.சம்பந்தப்பட்ட ரயில்வே ஸ்டேஷன்களில் கட்டடம் கட்டுதல், பிளாட்பாரம் அமைத்தல் போன்ற பணிகள் 90 சதவீதம் நிறைவு பெற்றுள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் ரயில்வே ஸ்டேஷனில் பயணிகளுக்கான அடிப்படை வசதிகள், சிக்னல்கள் அமைத்தல், ரயில்பாதை சிலிப்பர் கட்டை பதித்தல், தண்டவாளம் பொருத்துதல் போன்ற பணிகளை மேற்கொள்வதற்கு மேலும் பல கோடி ரூபாய் ஒதுக்க அதிகாரிகள் ரயில்வே நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர். நிதி வந்தவுடன்தான் மேற்கொண்டு பணிகள் செய்ய முடியும், நிதி கிடைக்காவிட்டால் பணிகள் மேலும் தாமதமடையும் என்று கூறப்படுகிறது.கடந்த ஆண்டு டிசம்பர் மாதமே பணிகள் முடிந்து தென்காசி - நெல்லை வழித்தடத்தில் ரயில் இயக்கப்படும் என்று தென்னக ரயில்வே நிர்வாகம் அறிவித்திருந்தது. ஆனால் தென்காசி - நெல்லை அகல ரயில்பாதை பணி ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. எனவே நடப்பு ஆண்டு இறுதிக்குள் பணிகளை முடித்து வரும் டிசம்பர் மாதத்திலாவது தென்காசி - நெல்லை ரயிலை இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி