உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / மேலப்பாளையத்தில் குடிநீர் கேட்டு பெண்கள் காலிக்குடங்களுடன் மறியல்

மேலப்பாளையத்தில் குடிநீர் கேட்டு பெண்கள் காலிக்குடங்களுடன் மறியல்

திருநெல்வேலி : மேலப்பாளையத்தில் குடிநீர் வசதி அளிக்க வலியுறுத்தி பெண்கள் காலிக்குடங்களுடன் சாலைமறியலில் ஈடுபட்டனர். மேலப்பாளையத்தில் குடிநீர் பிரச்னை அதிகரித்து வருகிறது. பல தெருக்களில் குடிநீர் சப்ளை சீராக இல்லை. சில தெருக்களில் குடிநீர் வருவதே இல்லை. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளுக்கு பலமுறை புகார் அளிக்கப்பட்டது. எனினும் குடிநீர் பிரச்னையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் மாநகராட்சி மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர். கடந்த 2ம்தேதி 32வது வார்டு பெண்கள் குடிநீர் அளிக்க வலியுறுத்தி மேலப்பாளையம் மண்டல அலுவலகம் முன் மறியலில் ஈடுபட்டனர். அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்திய பின் பெண்கள் மறியலை கைவிட்டனர். பஷீரப்பா தெருவில் கடந்த சில நாட்களாக குடிநீர் சப்ளை சீராக இல்லாததை கண்டித்து நேற்று மேலப்பாளையம் பஜார் திடலில் பெண்கள் காலிக்குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர். அப்பகுதியில் வாகனப்போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் கருப்பசாமி, போலீஸ் அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 'பஷீரப்பா தெருவிற்கு சீராக குடிநீர் சப்ளை அளிக்கப்படும், லாரி மூலம் குடிநீர் சப்ளை செய்யப்படும்' என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து பெண்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். பின்னர் வாகனப்போக்குவரத்து சீரானது. மேலப்பாளையத்தில் போதுமான குடிநீர் கிடைக்காமல் மக்கள் பரிதவித்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட மக்கள் அவ்வப்போது சாலை மறியலில் ஈடுபடுவது சகஜமாகி வருகிறது. மேலப்பாளையத்தில் நிலவும் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ