மேலும் செய்திகள்
ஓய்வு பெற்ற அதிகாரியை மிரட்டி ரூ.53 லட்சம் மோசடி
29-Sep-2025
நெல்லையில் ஹெலிகாப்டர் சுற்றுலா
25-Sep-2025
அம்பாசமுத்திரம் நகராட்சி தலைவர் பதவியை பெண்களுக்கு ஒதுக்க அ.தி.மு.க., முடிவு செய்துள்ளதாக பரவிய தகவலால், ஆண்கள் அதிர்ச்சியடைந்துள்ள நிலையில், விருப்ப மனு தாக்கலின் கடைசி நாளில் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்கள் மனுக்களை தாக்கல் செய்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர். கடந்த தேர்தல்களில் (1948 முதல் 1991 வரை) பொது பிரிவாக இருந்து வந்த, அம்பாசமுத்திரம் நகராட்சி தலைவர் பதவி 1996, 2001ல் பொது பிரிவில் இருந்து பெண்களுக்காக ஒதுக்கப்பட்டு முறையே த.மா.கா.,வை சேர்ந்த சந்திராவும், அ.தி.மு.க.,வை சேர்ந்த சுமதியும் தலைவராக பதவி வகித்தனர். 2006ல் தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்றவுடன் நகராட்சி தலைவரை நேரடியாக தேர்வு செய்வதற்கு பதிலாக கவுன்சிலர்களே தங்களுக்குள் ஒருவரை தலைவராக தேர்ந்தெடுக்கும் வகையில் அவசர சட்டம் இயற்றப்பட்டு, அதன்படி 13வது வார்டில் இருந்து கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்ட தி.மு.க.,வை சேர்ந்த பிரபாகரப்பாண்டியன் சிட்டிங் தலைவராக இருந்து வருகிறார். இச்சூழ்நிலையில், அடுத்த மாதம் நடக்கவிருக்கும் உள்ளாட்சி தேர்தலில் தலைவரை நேரடியாக தேர்ந்தெடுக்க வழிவகை செய்யப்பட்டுள்ள நிலையில், அ.தி.மு.க., தொண்டர்களிடமிருந்து வேட்பு மனுக்களை வாங்கி முடித்துள்ளது.
இக்கட்சி சார்பில் நகர செயலாளர் ஆறுமுகம், நகர அவை தலைவர் பேராசிரியர் செல்வராஜ், நகர ஜெ பேரவை செயலாளர் நெல்லையப்பன், முன்னாள் ஒன்றிய செயலாளர் சர்மா, சங்குமுத்து, மாவட்ட பிரதிநிதி பார்வதி என பலர் தலைவர் பதவியை குறி வைத்து மனுக்கள் தாக்கல் செய்தனர். இதற்கிடையில், இம்முறை அ.தி.மு.க.,வில் நகராட்சி தலைவர் பதவிக்கு பெண்களுக்கு ஒதுக்கப்படுவதாக தகவல்கள் பரவின. இத்தகவலால் ஆண்கள் அதிர்ச்சிக்குள்ளான அதே நேரத்தில், மனு தாக்கலின் கடைசி நாளான்று பெண்கள் பலர் விருப்ப மனுக்களை தாக்கல் செய்து பரபரப்பை ஏற்படுத்தினர். தலைவர் பதவிக்கு விருப்ப மனு தாக்கல் செய்த ஆண்களில் சிலர் வார்டு கவுன்சிலர் பதவிக்கும், கவுன்சிலர் பதவிக்கு விருப்ப மனு தாக்கல் செய்த பெண்களில் சிலர் தலைவர் பதவிக்கும் இறுதி நாளன்று கூடுதல் விருப்ப மனுக்களை தாக்கல் செய்தனர்.
அ.தி.மு.க.வில் பெண்களுக்கு சீட் வழங்கப்படும் பட்சத்தில் செல்வி, பார்வதி, முத்துலட்சுமி, தங்கமாரியின் பெயர்கள் அடிபடிகின்றன. இதில் செல்வி ஒரு முறை துணை தலைவர் பதவியையும், ஒரு முறை கவுன்சிலர் பதவியையும் வகித்துள்ளது அவருக்கு பிளசாக அமையும் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள். இவர், இரண்டாவது முறை கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்ட போது, திருவிளக்கு சீட்டு முறையில் துணை தலைவர் பதவியை இழந்தார். இதே போல் முத்துலட்சுமியும் ஒரு முறை கவுன்சிலராக பதவி வகித்துள்ளார். பார்வதியும், தங்கமாரியும் உள்ளாட்சிக்கு புதியவர்கள் என்கின்றனர் ரத்தத்தின் ரத்தங்கள்.
நகராட்சி தலைவர் பதவி இம்முறையும் பொது பிரிவாக தொடரும் பட்சத்தில் தி.மு.க., சார்பில் சிட்டிங் தலைவர் பிரபாகரப்பாண்டியனே மீண்டும் களம் இறங்குவர் என கூறும் உடன் பிறப்புகள், வரும் 16ம் தேதி வரை விருப்ப மனுக்கள் பெறப்படுவதால், மாற்றத்திற்கு கேற்ப தங்களை தயார்படுத்திக் கொள்ள கால அவகாசம் இருப்பதாகவும் கருதுகின்றனர். ஒதுக்கீடு எதுவானாலும் நகராட்சியை தக்க வைப்பதில் தி.மு.க.,வும், அக்கட்சியிடமிருந்து கைப்பற்றுவதில் அ.தி.மு.க.,வும் முழு வீச்சில் களம் இறங்குவார்கள் என்பதில் ஐயமில்லை.
29-Sep-2025
25-Sep-2025