உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / கூடன்குளம் அணுமின் நிலையத்தை மூட வேண்டும் : இடிந்தகரையில் மீனவர்கள் உண்ணாவிரதம்

கூடன்குளம் அணுமின் நிலையத்தை மூட வேண்டும் : இடிந்தகரையில் மீனவர்கள் உண்ணாவிரதம்

வள்ளியூர் : கூடன்குளம் அணுமின் நிலையத்தை மூட வலியுறுத்தி இடிந்தகரையில் நெல்லை மாவட்ட கடற்கரை கிராம மக்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். நெல்லை மாவட்டம் கூடன்குளத்தில் ரஷ்ய நாட்டு உதவியுடன் 13 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தலா ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட இரண்டு அணு உலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதில் முதல் அணு உலையின் பணிகள் முடிவடைந்து வரும் டிசம்பர் மாதத்திற்குள் மின் உற்பத்தி துவக்கப்பட இருக்கிறது. இதற்காக முதல் அணு உலையில் பல்வேறு சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அணு உலை மூலம் மின் உற்பத்தி துவங்கும் போது கூடன்குளத்தை சுற்றியுள்ள கிராம மக்கள் அப்புறப்படுத்தபடுவார்கள் என்ற அச்சத்திலும், அணு உலை மூலம் கதிர்வீச்சி ஏற்படும் என்ற பீதியிலும் மக்கள் அணு உலையை எதிர்த்து போராடி வருகின்னறர். மேலும் கூடன்குளத்தை சுற்றியுள்ள செட்டிகுளம், விஜயாபதி, இருக்கன்துரை, லெவிஞ்சிபுரம் பஞ்., கிராம பொதுமக்கள் அணு உலை மூலம் பாதிக்கப்படுவமோ என்ற அச்சத்திலும் பீதியிலும் உள்ளனர். இந்நிலையில் நெல்லை மாவட்ட கடற்கரை மீனவ கிராமங்களான கூட்டப்புளி, பெருமணல், பஞ்சல், இடிந்தகரை, தோமையார்புரம், கூத்தங்குழி, உவரி, கூட்டபணை, கூடுதாழை, பெரியதாழை கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் இடிந்தகரையில் மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடத்த தீர்மானித்தனர்.

அதன்படி கடற்கரை கிராமங்களை சேர்ந்தவர் இடிந்தகரை புனித லூர்து மாதா ஆலயம் முன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கடற்கரை கிராமங்களை சேர்ந்த சுமார் ஆயிரத்து 200 நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. மேலும் உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, கடற்கரை கிராம பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் உண்ணாவிரத போராட்டத்திற்கு அழைத்து வந்தனர். உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்ற மீனவ மககள் கூறியதாவது: கூடன்குளம் அணு உலைக்கு அருகில் 1500 மீட்டர் சுற்றளவில் யாரும் மீன்பிடிக்க கூடாது என்று கடந்தாண்டு ஒரு அரசு கூட்டம் போட்டுள்ளனர். இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளோம். அணு உலை மூலம் மின் உற்பத்தி தொடங்கும் போது 16 கிலோ மீட்டர் தொலைவிற்கு மீன் பிடிக்ககூடாது என்று சொல்வார்கள். மீனவர்கள் வாழ்வாதாரமே மீன் பிடித்தல்தான். அதனை தடைசெய்யும் போது மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். மேலும் அணு உலை மூலம் கதிர்வீச்சு ஏற்பட்டால் பாதிப்பு பெருமளவில் ஏற்படும். அணு உலையை மூட வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். கூடன்குளம் அணு உலைக்கு எதிர்ப்பு தெரிவித்து இடிந்தகரை புனித லூர்து மாதா ஆலயம் முன் கறுப்பு கொடி ஏற்றப்பட்டிருந்தது. அனைத்து தெருக்களிலும் இருபக்கமும் கறுப்பு கொடி வரிசையாக கட்டப்பட்டிருந்தது. உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, மாவட்டங்களை சேர்ந்த அணு உலை எதிர்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர். இதனால் இடிந்தகரையில் எங்கு பார்த்தாலும் மக்கள் வெள்ளமாக காணப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை