காற்று மாசு குறைந்த நகரம்: திருநெல்வேலிக்கு முதலிடம்
திருநெல்வேலி: இந்திய அளவில், காற்றின் மாசு குறியீட்டு ஆய்வில், மாசு குறைந்த நகரமாக திருநெல்வேலியை மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் காற்று மாசு குறியீட்டு ஆய்வை அவ்வப்போது மேற்கொள்கிறது. சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வை, ஜன., 9ல் வெளியிட்டது. இதில், மாசு குறைந்த டாப் 10 நகரங்களில் திருநெல்வேலி முதலிடத்தை பிடிக்கிறது.அருணாச்சலபிரதேச மாநிலத்தில், நகரியாகன் நகரம் இரண்டாவது இடத்தையும், கர்நாடக மாநிலம் மடிக்கேரி மூன்றாம் இடத்தையும், தஞ்சாவூர் 5ம் இடத்தையும் பிடித்துள்ளன.மிகவும் மோசமான காற்று மாசடைந்த நகரங்களில் முதல் இடத்தை டில்லியும், இரண்டாம் இடத்தை உத்தர பிரதேச மாநிலம், காசியாபாத் நகரமும், மூன்றாம் இடத்தை மேகாலயாவின் பிரீன்ஹத் நகரமும் பிடித்துள்ளன.