திருவள்ளூர் : திருவள்ளூரில், 18வது வார்டில் சாலைகள் மோசமாகி சரி செய்யப்படாமல் உள்ளதால், பல இடங்களிலும் திடீர் பள்ளங்கள் ஏற்பட்டு, அவற்றில் பொதுமக்கள் விழுந்து அவதிப்படுகின்றனர். திருவள்ளூர் நகராட்சியில் பாதாள சாக்கடைத் திட்டத்திற்காக சாலைகளில் பள்ளங்கள் தோண்டி அவற்றை சரி வர மூடாமல் விட்டு விட்டுள்ளனர். இதனால், சாலைகளில் மழை மற்றும் கழிவுநீர் தேங்குவதும், ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்படுவதும், அவற்றில் பொதுமக்கள் விழுவதும் தொடர் கதையாகி வருகிறது.
நகராட்சி 18வது வார்டுக்குட்பட்ட பத்தியால்பேட்டை பகுதியில் நேற்று முன்தினம், திடீரென பள்ளங்கள் ஏற்பட்டு அதை எதிர்பார்க்காமல் வழக்கம்போல் சென்ற வாகன ஓட்டிகள், நடந்து சென்ற பாதசாரிகள் என, பலரும் பள்ளங்களில் விழுந்து காயங்களுடன் எழுந்து சென்றனர். அடிக்கடி நடந்து வரும் அவதிகள் குறித்து, அப்பகுதி நகராட்சி கவுன்சிலர் தாமஸ் (எ) ராஜ்குமார் கூறும் போது, ''நகராட்சி 18வது வார்டில், வி.எம்., நகர், பத்தியால்பேட்டை மற்றும் ஜெயா நகர் ஆகிய மூன்று பிரதான சாலைகள் சீர் செய்யப்படாமல் இருந்து வருவது உண்மை. ஆனால், அவற்றை சீரமைக்க டெண்டர் விடப்பட்டு, பணி உத்தரவு வழங்கப்பட்டும், பணிகள் நடக்காமல் உள்ளது.
இதுகுறித்து, ஒப்பந்ததாரரிடம் கேட்டதற்கு அவர், ''மண் கிடைக்கவில்லை. தினமும் ஒவ்வொரு விலை சொல்கிறார்கள். அதனால் தான் லேட், எவ்வளவு விரைவாக சாலைகளை செப்பனிட முடியுமோ அதற்கான பணிகளை விரைவு படுத்த நகராட்சியிடம் வற்புறுத்தி வருகிறேன்,'' என்றார். இது குறித்து நகராட்சி கமிஷனர் சரவணகுமார் கூறும் போது. ''உடனடியாக பணிகள் துவங்கி குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க ஆவன செய்யப்படும்'' என்றார்.