உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / 22 செ.மீ., பதிவு கும்மிடிப்பூண்டியில் கொட்டிய மழை

22 செ.மீ., பதிவு கும்மிடிப்பூண்டியில் கொட்டிய மழை

திருவள்ளூர் மாவட்டத்தில், அதிகபட்சமாக கும்மிடிப்பூண்டி பகுதியில் நேற்று முன்தினம், 22 செ.மீ., மழை பதிவானது. சென்னை -- கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், கும்மிடிப்பூண்டி சிப்காட் மேம்பாலம் அருகே தேசிய நெடுஞ்சாலையில், மூன்று அடி உயரத்திற்கு மழை வெள்ளம் சூழ்ந்திருப்பதால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துடன் கடந்து வருகின்றனர்.தச்சூர் கூட்டு சாலை, கும்மிடிப்பூண்டி கன்னியம்மன் கோவில், சிப்காட் ஆகிய மேம்பாலங்களின் கீழ் உள்ள இணைப்பு சாலைகளில் மழை வெள்ளம் சூழ்ந்தது. இணைப்பு சாலையில் மிதந்தபடி வாகனங்கள் கடந்து செல்கின்றன. கும்மிடிப்பூண்டி நகர் பகுதிக்கும் சிப்காட் பகுதிக்கும் இடையே ரயில் பாதை செல்கிறது. அதனால், ரயில் நிலையம் அருகே உள்ள சுரங்க பாதை வழியாக தினசரி நுாற்றுக்கணக்கான தொழிலாளர்கள் சென்று வருவது வழக்கம்.அந்த சுரங்கபாதையில் குளம் போல், ஐந்து அடி உயரத்திற்கு மழை வெள்ளம் சூழ்ந்தது. போக்குவரத்தை தடை செய்யும் விதமாக சுரங்க பாதையின் இரு முனையிலும் உள்ள இரும்பு கதவு மூடப்பட்டது. இதனால், சிப்காட் தொழிலாளர்கள் அனைவரும் ஆறு கிலோமீட்டர் சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் அவ்வழியாக கடந்து செல்லும் பாதசாரிகள் ரயில் நிலையத்தில் உள்ள நடை பாலம் வழியாக சென்று வருகின்றனர். தாமரை ஏரியில் தேங்கி இருந்த கழிவுநீர் கடந்த இரு தினங்களாக, கும்மிடிப்பூண்டி ஜி.என்.டி., சாலையின் இரு புறமும் ஆறாக பாய்கிறது. சாலையின் தாழ்வான பகுதிகளில் கழிவுநீர் தேங்கி உள்ளது. ரெட்டம்பேடு சாலையிலும் கழிவுநீர் தேங்கி இருக்கிறது. வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துடன் கடந்து வருகின்றனர். ஏராளமான இருசக்கர வாகனங்கள் மழை வெள்ளத்தில் சிக்கி பழுதானது.தாமரை ஏரிக்கரை ஓரம் உள்ள அம்பிகா நகர், கோட்டக்கரை சாய் பாபா நகர், ரெட்டம்பேடு சாலையில் அமைந்துள்ள சாய் கிருபா நகர் உட்பட, 10க்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதிகளில் கழிவுநீர் சூழ்ந்துள்ளது.இதனால் கும்மிடிப்பூண்டி நகர் பகுதி சாலை மற்றும் குடியிருப்பு பகுதிகளில்துர்நாற்றம் வீசி வருகிறது. கழிவுநீரை அப்புறப்படுத்தும் பணியில் பேரூராட்சி நிர்வாகத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.மேலும், கும்மிடிப்பூண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட மேட்டு தெரு தரைப்பாலம் மூழ்கியது. வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துடன் கடந்து வருகின்றனர். தரைப்பாலம் மோசமான நிலையில் இருப்பதால் எந்த நேரத்திலும் துண்டிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.*திருத்தணி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் 29ம் தேதி இரவு முதல் நேற்று மாலை வரை தொடர்ந்து மழை பெய்தது. இந்த மழையால் விவசாய பணிகள், வியாபாரம் மற்றும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மழையிலும் பூ பயிரிட்ட விவசாயிகள் குடை பிடித்தும், ரெயின் கோட் அணிந்து பூக்களை பறித்து திருத்தணி பூ மார்க்கெட்டிற்கு வந்து விற்பனை செய்தனர்.மேலும் திருத்தணி நகரம், மகா விஷ்ணு நகரில் தாழ்வான பகுதியில் கட்டப்பட்டுள்ள வீடுகள் சுற்றியும் மழைநீர் சூழ்ந்துள்ளது. மழையால் திருத்தணி அடுத்த நெமிலி கிராமத்தில், பசுமாடு ஒன்று இறந்தது. மேலும் திருத்தணி தாலுகாவில், ஐந்து இடங்களில் ஏற்படுத்தப்பட்ட சிறப்பு முகாமில், 275 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு தேவையான உணவு மற்றும் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மொத்ததில் இரு நாட்களாக பெய்த மழையால், பெரும்பாலான மக்கள் வீட்டிலிருந்து வெளியே வராமல் முடங்கி கிடந்தனர்.* திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டு பகுதியில் அமைந்துள்ளது சத்யசாய் நகர். இங்கு நுாற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியைச் சுற்றி 15க்கும் மேற்பட்ட நகர்கள் உள்ளன, இங்குள்ள ஏரிக்கு செல்லும் வகையில் கால்வாய் வசதி முறையாக இல்லை. இதனால் தற்போது மழைநீர் வெளியேற வழியில்லாமல் குடியிருப்பு பகுதிகளில் குளம்போல் தேங்கி நிற்கிறது. இப்பகுதிவாசிகள் அத்தியாவசிய தேவைகளுக்காக கூட வெளியே வர முடியாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். - நமது நிருபர் குழு-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ