மாற்றுத்திறனாளிகள் இல்லங்கள் பதிவு செய்யாவிட்டால் நடவடிக்கை
திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மாற்றுத்திறனாளிகளுக்கான இல்லங்கள் பதிவு செய்யாமல் இயங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, கலெக்டர் எச்சரித்துள்ளார்.திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:திருவள்ளூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்காக பணிபுரியும் பயிற்சி மையம், சிறப்பு பள்ளி மற்றும் இல்லங்கள், கல்வி, இயன்முறை மற்றும் தொழிற்பயிற்சி அளிக்கும் பணிகளை மேற்கொள்ளும் அரசு சாரா நிறுவனங்கள் பதிவுச் சான்று மற்றும் அங்கீகாரம் பெற்று இயங்கி வருகிறது.இதுவரை, பதிவுச் சான்று மற்றும் அங்கீகாரம் பெறாமல் இயங்கி வரும் அரசு சாரா நிறுவனங்கள் ஒரு மாத காலத்திற்குள் அங்கீகாரம் பெறவில்லை என்றால் மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம் 2016ன் படிகடும் நடவடிக்கை எடுக்கப்படும்.எனவே, இதுவரை பதிவு பெறாத அரசு சாரா நிறுவனங்கள், தங்களுடைய விண்ணப்பம் மற்றும் கருத்துருவை கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நேரில் சமர்ப்பித்து அரசு அங்கீகாரம் மற்றும் பதிவு சான்று பெற வேண்டும்.தவறும் பட்சத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.