ப்ளூ ஸ்கை டி - 20 கிரிக்கெட் லீக்: ஹடில் அணி தோல்வி
சென்னை: சென்னையில் உள்ள ப்ளூ ஸ்கை கிரிக்கெட் அகாடமி சார்பில், குரு ராகவேந்திரா கோப்பைக்கான டி - 20 கிரிக்கெட் லீக் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் பங்கேற்றுள்ள அணிகள் மண்டலம் வாரியாக பிரிக்கப்பட்டுள்ளன.ஒவ்வொரு மண்டலத்திலும், ஒன்பது அணிகள் இடம்பெற்றுள்ளன. இந்த அணிகள் மற்ற அணியுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். தரவரிசை அடிப்படையில் அரையிறுதி போட்டிக்கு அணிகள் தேர்வு செய்யப்படும். அதில் வெற்றி பெறும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.அந்த வகையில், 'ஜெ' மண்டலத்திற்கான லீக் போட்டிகள், சேத்துப்பட்டு எம்.சி.சி., பள்ளி மைதானத்தில், நேற்று காலை நடந்தது. இதில், யுனிகார்ன் அணியை எதிர்த்து ஹடில் அணி களமிறங்கியது. 'டாஸ்' வென்ற யுனிகார்ன் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் யுனிகார்ன் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்கள் என்ற வலுவான இலக்கை எட்டியது. அதிகபட்சமாக சையது 30 பந்துகளில் 59 ரன்களும், ஆஷிப் 26 பந்துகளில் 54 ரன்களும் விளாசினர்.சவாலான இலக்கை நோக்கி, ஹடில் அணியினர் அடுத்து களமிறங்கினர். துவக்கம் முதலே அதிரடியாக விளையாடியதால், 4.1 ஓவரில் அந்த அணி 50 ரன்களைக் கடந்தது. ஆட்டத்தின் 10வது ஓவர் வரையில், ஆட்டம் ஹடில் அணியின் பக்கம் இருந்தது.இதையடுத்து, அடுத்தடுத்து விக்கெட்டுகள் இழந்ததால், யுனிகார்ன் அணியினர் உற்சாகம் அடைந்தனர். ஆட்டத்தை தங்கள் பக்கம் கொண்டு வந்து, நேர்த்தியாக பந்துகளை வீசி ரன்களை கட்டுப்படுத்தினர். இதனால், 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்த ஹடில் அணி, 11 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியடைந்தது.