கோவிலில் மூதாட்டி சிவபக்தரை தாக்கிய பூசாரி மீது வழக்கு
திருவள்ளூர்,:திருவள்ளூர் அடுத்த, திருப்பாச்சூர் பகுதியில் அமைந்துள்ளது தங்காதலி அம்மன் உடனாய வாசீஸ்வர சுவாமி கோவில். திருத்தணி முருகன் கோவிலின் உபகோயிலான இங்கு மகா சிவராத்திரியை முன்னிட்டு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய குவிந்தனர்.நேற்று முன்தினம், இரவு 11:00 மணியளவில், நான்காம் கால பூஜையின்போது, ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்துவிட்டு சென்று வந்தனர். இதில் கோவில் வளாகத்தில் சிவ தொண்டாற்றும் பக்தர்கள் கைலாய வாத்தியங்கள் வாசித்து வந்தனர்.அப்போது அங்கு பணியிலிருந்த பூசாரி சிவா, 50, மற்றும் அவரது மகன் இருவரும் கைலாய வாத்தியம் வாசிக்கும் பக்தர்களை கோவிலில் இருந்து வெளியே சென்று வாசியுங்கள் என, மரியாதை இல்லாமல் ஆபாசமாக ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது.இதனால், ஆத்திரமடைந்த சிவ பக்தர்கள் மற்றும் கைலாய வாத்தியம் வாசிக்கும் சிவனடியார்கள், பூசாரியிடம் மரியாதை கொடுத்து பேசுங்கள் என, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதில் ஆத்திரமடைந்த பூசாரி சிவா, வாத்தியம் வாசிக்கும் பெண் சிவபக்தர் அமலம்மாள், 62, என்பவரை கன்னத்தில் அறைந்துள்ளாார்.இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த சிவனடியார்கள் மற்றும் பக்தர்கள் கோவிலில் இருந்த பூசாரியை மன்னிப்பு கேட்க கூறியுள்ளனர். ஆனால் அவர் மன்னிப்பு கேட்காமல், நடராஜர் சன்னிதியில் உட்புறம் சென்று பூட்டு போட்டு கொண்டு இருந்துள்ளார்.பின், அமலம்மாள் மற்றும் சிவனடியார்கள், திருவள்ளூர் தாலுகா காவல் நிலையத்தில் அளித்த புகாரையடுத்து, போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.