புகார் பெட்டி
ஒளிராத மின்விளக்கு திருவாலங்காடு ஊராட்சிக்கு உட்பட்ட பவானி நகரில், 10க்கும் மேற்பட்ட தெருக்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.இப்பகுதியில் கடந்த மூன்று நாட்களுக்கு முன் ஸ்விட்ச் போர்டில் தீப்பற்றி எரிந்ததால் தெருவிளக்குகள் எரிவதில்லை. இதை சீரமைக்க வேண்டிய ஊராட்சி நிர்வாகம் மெத்தனமாக உள்ளதால் தெரு முழுதும் இருளில் முழ்கியுள்ளது.இதனால் பெண்கள் முதியவர்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். எனவே தெருவிளக்கை சீரமைக்க பி.டி.ஓ., அலுவலக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- க. முத்துலிங்கம், திருவாலங்காடு.சீரமைக்காத பூங்கா கடம்பத்துார் ஒன்றியம் போளிவாக்கம் ஊராட்சிக்குட்பட்ட கோமதி நகர் பகுதியில் 300க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக விளையாட்டு உபகரணங்களுடன் கூடிய பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இந்த பூங்காவை இப்பகுதிவாசிகள் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் தற்போது இந்த பூங்கா முறையான பராமரிப்பு பணி மேற்கொள்ளாததால் முட்புதர் வளர்ந்து பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பூங்காவை சீரமைக்க வேண்டும்.- வே.ராஜேஷ், கோமதி நகர், போளிவாக்கம்.பராமரிப்பு இல்லாத பேருந்து நிழற்குடைபொன்னேரி அடுத்த பெரும்பேடு பேருந்து நிழற்குடை பராமரிப்பு இன்றி உள்ளது. கட்டடத்தின் கட்டுமானங்கள் சேதமடைந்து உள்ளன. மேலும், சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்து வருகின்றன.நிழற்குடையை சுற்றிலும் செடிகள் வளர்ந்து புதர்மண்டி கிடக்கிறது. பயணியர் நிழற்குடை உள்ளே செல்வதற்கு தயங்குகின்றனர். மழை, வெயில் நேரங்களில் நிழற்குடையின் வெளி வளாகத்தில் நின்று பேருந்திற்கு காத்திருந்து சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே, பராமரிப்பு இன்றி கிடக்கும் பயணியர் நிழற்குடையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.- ரா.கிருஷ்ணா, பொன்னேரி.