கம்ப்யூட்டர் டிக்கெட் மையம் புட்லுார் பயணியர் எதிர்பார்ப்பு
புட்லுார்: புட்லுார் ரயில் நிலையத்தில் கம்ப்யூட்டர் டிக்கெட் மையம் அமைக்க வேண்டும் என, ரயில் பயணியர் சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.திருவள்ளூர்- அரக்கோணம் ரயில் பாதையில், திருவள்ளூருக்கு அடுத்ததாக, புட்லுார் ரயில் நிலையம் அமைந்துள்ளது. புட்லுார் அருகில், காக்களூர் தொழிற்பேட்டை, அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில், பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில், வீர ஆஞ்சநேயர் கோவில் உள்ளது.சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இக்கோவில்களுக்கு வந்து செல்கின்றனர். தினமும் கல்வி, மருத்துவம், பணி உள்ளிட்ட தேவைகளுக்காக காக்களூர், பூங்கா நகர், புட்லுார் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு ரயிலில் சென்று வருகின்றனர்.இந்த ரயில் நிலையத்தில், தனியார் மூலம் டிக்கெட் வழங்கப்படுகிறது. முன்னரே அச்சடிக்கப்பட்ட விலையில், சில குறிப்பிட்ட ரயில் நிலைங்களுக்கு மட்டுமே, டிக்கெட் வழங்கப்படுகிறது. மேலும், சில நாட்களில், டிக்கெட்டில் தவறான தேதியை கவனக்குறைவால் ஊழியர்கள் அச்சடித்து வழங்குகின்றனர்.இதனால் பயணிகள் பல்வேறு வகையில் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, புட்லுாரில் முன்பதிவற்ற கணினி டிக்கெட் வழங்கும் மையம் அமைக்க வேண்டும் என, ரயில்வே துறைக்கு பயணியர் சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.