மணலி குப்பை வளாகத்தில் தீ விபத்து மூச்சு திணறல், கண் எரிச்சலால் அவதி
மணலி, மணலி குப்பை வளாகத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தால், சுற்றுவட்டார மக்கள் மூச்சுத்திணறல், கண் எரிச்சலால் பெரிதும் அவதிப்பட்டனர்.மணலி பல்ஜிபாளையத்தில், குப்பையில் இருந்து உரம் தயாரிக்கும் வளாகம் செயல்படுகிறது. இங்கு, 64 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இதே வளாகத்தில், மறு சுழற்சி செய்வதற்காக, பல்லாயிரக்கணக்கான கிலோ பிளாஸ்டிக் குப்பை கொட்டி வைக்கப்பட்டுள்ளது.நேற்று காலை, திடீரென பிளாஸ்டிக் குப்பை குவியலில் தீப்பற்றி எரிய துவங்கியது. ஊழியர்கள் தீயை அணைக்க முயற்சித்தும், காற்று பலமாக வீசியதால், தீ மளமளவென குப்பை மேடு முழுதும் பரவியது. பிரமாண்ட புகைமூட்டம் மணலி முழுதும் பரவி பாதிப்பு ஏற்பட்டது. மணலி, மாதவரம், திருவொற்றியூர் உள்ளிட்ட தீயணைப்பு நிலையங்களில் இருந்து, 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள், வீரர்கள் வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுற்றுவட்டாரத்தில் உள்ள ரசாயன தொழிற்சாலைகளின் தீயணைப்பு வாகனங்கள், 30 குடிநீர் லாரிகள், பொக்லைன் இயந்திரங்களும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன.இருப்பினும், மதியம், 2:00 மணி வரை, காற்றின் வேகம் குறையாததால், தீ கொழுந்து விட்டு எரிந்தபடி இருந்தது. வீரர்கள், மாலை வரை தீயை அணைக்க போராடினர்.தகவலறிந்த, சென்னை மாநகராட்சி வடக்கு வட்டார துணை கமிஷனர் கட்டா ரவி தேஜா, மணலி மண்டல குழு தலைவர் ஏ.வி.ஆறுமுகம், அப்பகுதி கவுன்சிலர் தீர்த்தி ஆகியோர் முகாமிட்டு, தீ அணைக்கும் பணியை துரிதப்படுத்தினர்.மணலி முழுதும் புகைமூட்டம் பரவிய நிலையில், மக்கள் மூச்சு திணறல், கண் எரிச்சல் உள்ளிட்ட உடல் உபாதைகளுக்கு ஆளாகினர். தவிர, தீயணைப்பு வீரர்கள், மாநகராட்சி ஊழியர்கள், போலீசாரும் கண் எரிச்சலால் அவதியுற்றனர்.வளாகத்தில், 'சிசிடிவி' கேமரா இல்லாதது குறித்து, துணை கமிஷனர் கேள்வி எழுப்பினர். ஊழியர்கள் பதில் சொல்ல முடியாமல் திணறினர். 12 மணி நேர போராட்டத்துக்குப்பின் தீ கட்டுக்குள் வந்தது. தீவிபத்து குறித்து, மணலி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தால் ஆபத்து
சில மாதங்களுக்கு முன், பயோ காஸ் தயாரிக்கும் நிறுவனத்தில், திடீரென வெடி விபத்து ஏற்பட்டு ஒருவர் உயிரிழந்தார். இதனால், சுற்றுவட்டார மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள், அதே பகுதியில் குப்பை வளாகத்தில், பயங்கர தீ விபத்து ஏற்பட்டு மணலி முழுதும் புகைமூட்டம் ஏற்பட்டு, கண் எரிச்சல், மூச்சு திணறல் உள்ளிட்ட பிரச்னைகளை எதிர்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில், மணலி மண்டல நிர்வாகத்தை பிரித்து, திருவொற்றியூர், மாதவரத்துடன் இணைத்தால், அவசர காலத்தில் பிரச்னைகளை எதிர்கொள்வதில் கடும் சிக்கல் எழும் என, அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.