பள்ளியில் சீரமைக்கப்பட்ட மாணவியர் கழிப்பறைக்கு பூட்டு
திருத்தணி:திருத்தணி ஒன்றியம் புச்சிரெட்டிப்பள்ளி அரசினர் மேல்நிலைப் பள்ளியில், 400க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் படித்து வருகின்றனர். இப்பள்ளி வளாகத்தில் இருந்த கழிப்பறைகள் போதிய பராமரிப்பின்றியும், போதிய அளவில் இல்லாததால் மாணவியர் வரிசையில் நின்று தங்களது இயற்கை உபாதைகளை கழிக்க வேண்டியுள்ளது.இதனால், மாணவியர் இயற்கை உபாதைகளை கழிக்க முடியாமல் கடும் சிரமப்பட்டு வந்தனர்.இதையடுத்து, மாவட்ட நிர்வாகம் உத்தரவின்படி, பழுதடைந்து பராமரிப்பின்றி இருந்த மூன்று மாணவியர் கழிப்பறையை, சில மாதங்களுக்கு முன், ஒரு லட்சம் ரூபாயில் சீரமைக்கப்பட்டது.ஆனால், கழிப்பறையை பயன்பாட்டிற்கு விடாமல் பூட்டியே கிடப்பதால் மாணவியர் அவதிப்படுகின்றனர். இதனால் மாணவியர் தங்களது இயற்கை உபாதைகளை கழிக்க முடியாமல் சிரமப்படுவதுடன், மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.எனவே, கலெக்டர் விரைந்து நடவடிக்கை எடுத்து, கழிப்பறைகளை திறந்து பயன்பாட்டிற்கு விட வேண்டும் என, அப்பகுதியினர் எதிர்பார்க்கின்றனர்.