சோளிங்கரில் அரசு கல்லுாரி அருகே திறந்தநிலை கழிவுநீர் கால்வாய்
சோளிங்கர்: ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரில் அரசு கலை கல்லுாரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லுாரியில், ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களை சேர்ந்த மாணவர்கள் படித்து வருகின்றனர். ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு ஒன்றியங்களை சேர்ந்த மாணவர்கள் இந்த கலைக்கல்லுாரியில் அதிகளவில் படித்து வருகின்றனர். இந்த கல்லுாரி திறக்கப்படும் முன் வரை, வாலாஜாபேட்டை அரசு கலைகல்லுாரியில் படித்து வந்தனர்.சோளிங்கர் அரசு கலை கல்லுாரி, தற்போது வாடகை கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த கல்லுாரிக்கு, பாட்டிகுளம் பகுதியில் இருந்தும், பரவத்துார் சாலையில் இருந்தும் இரண்டு வழிகள் உள்ளன. பாட்டிகுளம் பகுதியில் இருந்து வரும் மாணவர்களுக்கான நுழைவாயிலில், கழிவுநீர் கால்வாய் திறந்த நிலையில் உள்ளது. இதனால், மாணவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். மேலும், நுழைவாயில் பகுதியில் வைக்கப்பட்டுள்ள கல்லுாரி பெயர் பலகையும் சிதைந்து கிடக்கிறது. எந்த நேரத்திலும் கீழே விழும் நிலையில் உள்ளது. மாணவர்களின் நலன் கருதி, கழிவுநீர் கால்வாய்க்கு கான்கிரீட் தளம் அமைக்கவும், முறையான பெயர் பலகை பொருத்தவும் பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.