திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்துார் ஒன்றியம் மப்பேடு ஊராட்சியில், இந்திய அரசின் 'பாரத் மாலா பரியோஜாவா' திட்டத்தின் கீழ் பல்முனை சரக்கு போக்குவரத்து பூங்கா பணிகள் விறுவிறுப்பாக நடக்கின்றன.தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம், நேஷனல் ஹைவே லாஜிஸ்டிக்ஸ் மேலாண்மை நிறுவனம் மற்றும் சென்னை துறைமுகம் ஆகியவை இணைந்து, பொது மற்றும் தனியார் பங்களிப்புடன், 181 ஏக்கர் பரப்பளவில், 1,200 கோடி ரூபாயில் பல்முனை சரக்கு போக்குவரத்து பூங்காவை துவக்க திட்டமிடப்பட்டது.கடந்த 2021ல், சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், காணொலி காட்சி வாயிலாக தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் டில்லியில் இருந்து மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி உள்ளிட்டோர் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. சாலை விரிவாக்கம்
இந்த பூங்காவை சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை மற்றும் சென்னை எல்லை சுற்றுச்சாலையுடன் இணைக்கும் வகையில், முதற்கட்டமாக காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம் மண்ணுார் முதல் திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்துார் ஒன்றியம் மப்பேடு பகுதியில் அமையவுள்ள சரக்கு பெட்டக பூங்கா வரை, 5.4 கி.மீ., துாரமுள்ள சாலை 58 கோடி ரூபாயில் விரிவாக்கப் பணிகள் நடந்து வருகின்றன.இந்நிலையில், நேற்று முன்தினம் இந்த பல்முனை சரக்கு பூங்கா பணிகளை மத்திய அரசு துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் அமைச்சகத்தின் செயலர் டி.கே.ராமச்சந்திரன், சென்னை துறைமுக ஆணையத்தின் தலைவர் சுனில் பாலிவால், தொழில்துறை அரசு செயலர் அருண் ராய், கலெக்டர் பிரபுசங்கர் முன்னிலையில் ஆய்வு மேற்கொண்டனர். பல்முனை சரக்கு போக்குவரத்து பூங்கா பணிகளை ஆய்வு செய்த மத்திய அரசு அதிகாரிகள், பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென கலெக்டரிடம் அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது, திருவள்ளூர் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார், உதவி கலெக்டர் ஆயுஷ் குப்தா மற்றும் ஊரக வளர்ச்சி துறையினர், தேசிய நெடுஞ்சாலை துறையினர் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.