சித்தா, ஹோமியோபதி மருத்துவர் இல்லை அரசு மருத்துவமனையில் நோயாளிகள் அவதி
திருவள்ளூர்: திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில், அலோபதி, சித்தா, ஹோமியோபதி என, பல்வேறு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தினமும் 2,500க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கின்றனர்.இதில், 200க்கும் மேற்பட்டோர் இயற்கை சிகிச்சை பெற வேண்டி, ஹோமியோபதி, சித்தா மருத்துவ பிரிவுக்கு செல்கின்றனர். நேற்று முன்தினம் காலை இப்பிரிவிற்கு, 50க்கும் மேற்பட்ட நோயாளிகள் வந்தனர்.ஆனால், அப்பிரிவுகளில் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள் யாரும் இல்லாமல் காலியாக இருந்தது. இதனால், நீண்ட நேரம் காத்திருந்த நேயாளிகள், அங்கிருந்தவர்களிடம் விசாரித்தனர். அப்போது அவர்கள், 'ஹோமியோபதி மற்றும் சித்தா பிரிவு மருத்துவர்கள் கூட்டத்திற்கு சென்று விட்டனர். எனவே, யாரும் வரமாட்டர். திங்கட்கிழமை தான் வருவர்' என, அலட்சியமாக தெரிவித்தனர்.இதுகுறித்து ஹோமியோபதி சிகிச்சைக்காக வந்த கடம்பத்துாரைச் சேர்ந்த ஸ்ரீதர் கூறியதாவது:மனைவிக்கு சுவாச பிரச்னை இருந்ததால், அவரை ஹோமியோபதி சிகிச்சை பிரிவுக்கு அழைத்து வந்தேன். ஆனால், அங்கு மருத்துவர்கள் கூட்டத்திற்கு சென்று விட்டதாக தெரிவித்தனர். அவர்கள், திங்கட்கிழமை தான் வருவர் எனவும் தெரிவித்தனர்.இதனால், என் மனைவிக்கு உரிய சிகிச்சை அளிக்க இயலவில்லை. இதுகுறித்து, திருவள்ளூர் கலெக்டர் அலுவலக தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அங்குள்ள அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளேன். இதுபோல், மருத்துவ சிகிச்சை அளிக்கும் காலை நேரத்தில் மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க வேண்டும். கூட்டம் என்றால், மதியத்திற்கு மேல் செல்ல வேண்டும் என, விதிமுறை உள்ளது என்பதையும் அவர்களிடம் தெரிவித்துள்ளேன். இதை, மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை நிர்வாகம் கடைப்பிடிக்க வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.