பட்டாவை ரத்து செய்ய எதிர்ப்பு ஆர்.டி.ஓ.,விடம் மனு அளிப்பு
திருத்தணி:ஆர்.கே.பேட்டை ஒன்றியம், எஸ்.வி.ஜி.புரம் ஊராட்சியில், கடந்த 1998ம் ஆண்டு சமத்துவபுரம் எதிரே பிற்படுத்தப்பட்ட நலத்துறையின் சார்பில், 200 பேருக்கு அரசின் இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது.தற்போது, அந்த இடத்தில் ஒரு சில பயனாளிகள் மட்டும் வீடுகள் கட்டி வசித்து வருகின்றனர். மீதமுள்ள பயனாளிகள் வீடுகள் கட்டாமல் உள்ளனர். இந்நிலையில், வருவாய் துறையினர் வீடு கட்டாமல் உள்ள இடத்தில் பட்டா ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு பலகை வைத்துள்ளனர்.இதைத் தொடர்ந்து, 30க்கும் மேற்பட்டோர், நேற்று காலை திருத்தணி வருவாய் ஆர்.டி.ஓ., அலுவலகத்திற்கு வந்து, அரசு வழங்கிய வீட்டுமனை பட்டாவை ரத்து செய்யக்கூடாது.வீடுகள் கட்டுவதற்கு காலஅவகாசம் தரவேண்டும் என, ஆர்.டி.ஓ., தீபாவிடம் மனு அளித்தனர். இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக ஆர்.டி.ஓ., தீபா தெரிவித்தார்.