மதுக்கூடமான ரயில் நிலைய சாலை சின்னம்மாபேட்டை பெண்கள் அச்சம்
திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம் சின்னம்மாபேட்டையில் உள்ள ரயில் நிலைய சாலையில், டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. ரயில் நிலையம் அருகே அமைந்துள்ள இக்கடையால், திருவள்ளூர் மாவட்டத்தில் கிராமப்புற டாஸ்மாக் கடையில் அதிக வருமானம் ஈட்டுவதில் முதலிடத்தில் உள்ளது.இந்த மதுபான கடைக்கு கடம்பத்துார் துவங்கி மோசூர் வரை உள்ள 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிக்கும் 'குடி'மகன்கள் ரயில் வாயிலாக வந்து குடித்து விட்டு செல்கின்றனர்.இங்கு மது அருந்துவதற்கு மதுக்கூடம் இல்லாததால், ரயில் நிலைய சாலை, தொழுதாவூர் சாலையோரங்களில், மாலை 4:00 முதல் இரவு 9:00 மணி வரை மது அருந்துகின்றனர்.இதனால், இவ்வழியாக செல்லும் பள்ளி மாணவ - - மாணவியர், பெண்கள், சிறுவர்கள் அச்சத்துடன் செல்லும் நிலை நீடிக்கிறது.மேலும், 'குடி'மகன்கள் மது அருந்திவிட்டு சாலையிலேயே படுத்து தூங்குகின்றனர். அவ்வப்போது, சாலையில் குடித்து விட்டு சண்டை போட்டு வருகின்றனர். இதனால், அவ்வழியே செல்லும் பாதசாரிகள் மற்றும் வாகனத்தில் செல்வோர் கடும் அவதியடைகின்றனர்.போக்குவரத்து நிறைந்த இந்த சாலையில் நாளுக்கு நாள் போதை ஆசாமிகள் தரும் தொல்லை அதிகரிப்பதாலும், தகாத வார்த்தை மற்றும் செயலில் ஈடுபடுவதாலும், அவ்வழியாக செல்லும் பெண்கள் அச்சப்படுகின்றனர்.எனவே, இடையூறாக உள்ள மதுக்கடையை வேறு இடத்திற்கு மாற்றியமைக்க வேண்டும். மேலும், சாலையில் அமர்ந்து குடிப்பதை தடுக்க காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி பெண்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.