காட்டூர் - ரெட்டிப்பாளையம் சாலை சீரமைக்க கோரிக்கை
பொன்னேரி:பொன்னேரி அடுத்த ரெட்டிப்பாளையம் கிராமத்தில் இருந்து அத்தமஞ்சேரி வழியாக காட்டூர் கிராமத்திற்கு செல்லும் சாலை உள்ளது. தற்போது காட்டூர் ஏரியில் மண் குவாரி விடப்பட்டு உள்ளதால், நாள்முதல் இந்த சாலையில் டிப்பர் லாரிகள் பயணிக்கின்றன.அதிக சுமையுடன், தொடர்ந்து லாரி போக்குவரத்து இருப்பதால், சாலை ஆங்காங்கே உள்வாங்கி பள்ளங்கள் ஏற்பட்டும், மண் குவிந்து சகதியாகவும் மாறி உள்ளது. அத்யாவசிய தேவைகளுக்காக காட்டூரில் இருந்து பொன்னேரி செல்பவர்களும், அதேபோன்று ரெட்டிப்பாளையம், சோமஞ்சேரி கிராமத்தினர் காட்டூர் பஜார் பகுதிக்கு செல்வதற்கும் இந்த சாலையை பயன்படுத்துகின்றனர்.சாலை சேதம் அடைந்து போக்குவரத்திற்கு லாயக்கற்று இருப்பதால் இரு சக்கர வாகன ஓட்டிகள் சிரமத்துடன் பயணிக்கின்றனர். பள்ளங்களில் தடுமாற்றத்துடன் சென்று, சிறு சிறு விபத்துக்களில் சிக்கி தவிக்கின்றனர்.கார், வேன் உள்ளிட்டவை இந்த சாலையை பயன்படுத்தாமல், தத்தமஞ்சி கிராமம் வழியாக, 5 கி.மீ., சுற்றி பயணிக்கின்றன.மேற்கண்ட சாலையை சீரமைக்க மீஞ்சூர் ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அவர்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.